ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்த கெய்க்வாத்துக்கு காங். எம்பி ரேணுகா திடீர் ஆதரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்த கெய்க்வாத்துக்கு காங். எம்பி ரேணுகா திடீர் ஆதரவு

புதுடெல்லி- ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்த சிவசேனா எம்பிக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி ஒருவர் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது. ஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாத் விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியது.

கெய்க்வாத் விமானத்தில் பயணம் செய்ய ஏர் இந்தியா மட்டுமின்றி தனியார் விமானங்களும் தடை விதித்துள்ள விவகாரம் குறித்து சிவசேனா எம்பி ஆனந்த ராவ் அத்சுல் கேள்வி எழுப்பினார். சிவசேனா எம்பிக்கு ஏர் இந்தியா மட்டுமின்றி தனியார் விமானங்களும் தடை விதித்ததற்கு பல்வேறு கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.   இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ பேசுகையில், சட்டம் அனைவருக்கும் சமம்தான்.

எம்பியும் ஒரு சக பயணிதான். விமானத்தில் முறையற்று நடந்து கொள்பவர்களுக்கு விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கு சிவசேனா எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே நேரத்தில் காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரியும் ரவீந்திர கெய்க்வாத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ரவீந்திர கெய்க்வாத் மீது தவறு இருந்த போதிலும் இது போல ஏர் இந்தியா நிறுவனம் நடந்து கொள்வது முறையல்ல.

சரி ஏர் இந்தியா கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். ஆனால் மற்ற தனியார் விமான நிறுவனங்கள் ரவீந்திர கெய்க்வாத்துக்கு தடை விதித்தது ஏன்?  இத்தனைக்கும் அவர் பிற விமானங்களில் முன்பதிவு செய்திருந்தார்.

மேலும் இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. தேவையில்லாமல் இந்த விவகாரம் பெரிதாக்கப்படுவதாக கருதுகிறேன்.

அவர்கள் அளவுக்கு அதிகமாக எல்லை மீறி செயல்படுவதாகவே எனக்கு தோன்றுகிறது என்றார்.

.

மூலக்கதை