சம்பள பிரச்னை : தயாரிப்பாளர் சங்கம், பெப்சி மோதல் வெடித்தது

தினமலர்  தினமலர்
சம்பள பிரச்னை : தயாரிப்பாளர் சங்கம், பெப்சி மோதல் வெடித்தது

சம்பள பிரச்னை தொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்பிற்கும் மோதல் வெடித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு (பெப்சி) உட்பட்டு 24 சினிமா சங்கங்கள் உள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சினிமா தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும்.

இந்த ஆண்டு அதற்கான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வரும் நேரத்தில் பல படப்பிடிப்புகளில் தயாரிப்பாளர்களை மிரட்டி கூடுதல் சம்பளம் கேட்டு பெப்சி தொழிலாளர்கள் பிரச்னை செய்து வருவதாக புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சி அமைப்புக்கும் இடையில் நேற்று சம்பள பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையின் முடிவில் தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சம்பள பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் பெப்சியை சேர்ந்த சில அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி வருவதோடு. பேச்சுவார்த்தை என்ற பெயரில் தயாரிப்பாளர்களுக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது. இதனை பெப்சி அமைப்பு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அவமானப்படுத்தும் அமைப்புகளை கண்டிக்காமல் இருக்கிறது. சில அமைப்புகள் அராஜகமாக சம்பளத்தை அவர்களே நிர்ணயித்துக் கொண்டு தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கிறார்கள்.

இனிமேலும் தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர்களை கைவிட முடியாது. பெப்சி அமைப்போ, தொழிலாளர்களே தயாரிப்பாளர்களுக்கு எதிரிகள் அல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவது தயாரிப்பாளரின் கடமை. அதே நேரத்தில் அநியாயமான முறையில் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்துவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயிக்கும் சம்பளப்படி தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும். மேலும் இன்று முதல் (நேற்று) தங்களுக்கு உடன்படும் யாருடனுடன் தேவையான அளவில் ஆட்களை வைத்து வேலை செய்யும்படி தயாரிப்பாளர்களை சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வெளியாட்களை கொண்டும் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்கிறது இந்த அறிக்கை. இது தொடர்பாக இன்று பெப்சி அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மூலக்கதை