மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசும், மக்களும்... மறந்தனர்! வறட்சியை சமாளிக்க விழிக்குமா மாவட்ட நிர்வாகம்

தினமலர்  தினமலர்
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அரசும், மக்களும்... மறந்தனர்! வறட்சியை சமாளிக்க விழிக்குமா மாவட்ட நிர்வாகம்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் வரும் காலங்களில் வீடுகள் தோறும் மழைநீரை சேமிக்க அமைக்கப்பட்ட தொட்டிகள் துார்ந்து போய் செயல்படாமல் உள்ளன.

கடலுார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் பெய்யும் மழையும் சரியாக பெய்யாத நிலை உள்ளது. தென்மேற்கு பருவக் காற்றால் மழைபெரும் பகுதிகளான கர்நாடகாவிலும் மழையில்லை. இதனால் ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள் வறண்டுள்ளன. இதற்கிடையே, ஆடி மாதத்தில் காற்று வீசும். ஆனால், தற்போது, கத்திரி வெயில் போன்று தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் காய்ந்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் குடிநீருக்கு அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு பயன்படுத்தும் ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போயின.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் ஏரி, குளங்களில் தண்ணீர் சேமிக்க கூடிய அளவில் ஒரே நேரத்தில் துார் வார அரசு அனுமதி வழங்கியுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இதனால் பெரும்பாலான ஏரி, குளங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் துார்ந்துபோன மேல் மண் துார் வாரப்பட்டு வருகிறது. இதனால், வரும் காலங்களில் மழைநீர் சேகரிப்பதற்கு நீர் நிலைகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு முன் மழைநீரை வீணாக்காமல் பூமிக்கடியில் சேமித்து வைக்கும் திட்டமான மழைநீர் சேமிப்பு திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டபின் நிலத்தடி நீர் எதிர்பார்த்த அளவை விட கூடுதலானது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மழைநீர் சேமிப்பு தொட்டியை வீடுகள், அலுவலகங்களில் யாரும் பராமரிப்பது கிடையாது. இதனால் தொட்டிக ளில் மண் துார்ந்து மழைநீரை உறிஞ்சும் தண்மையை இழந்து விட்டன. ஏரி, குளங்களில் துார் வார முனைப்பு காட்டும் அரசு மழைநீர் சேகரிப்பு தொட்டியை சீரமைக்க மறந்தது ஏன் என தெரியவில்லை.

மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க கூடிய அரசு அலுவலகங்களில் கூட இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் வரும் மழைக் காலத்திற்குள் அரசு அலுவலகங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை சீரமைக்கவும், வீடுகளில் உள்ள தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளதா என நகராட்சி மூலம் தனியாக குழு அமைத்து கண்காணிக்கவும் வேண்டும்.அப்போதுதான் கிடைக்க கூடிய மழைநீரை வீணாக கடலில் சென்று கலக்காமல் முறை யாக சேமித்து பயன்படுத்த முடியும்.

மூலக்கதை