'மெட்ரோ' குடிநீர் நிறுத்தத்தால் புறநகர் நகராட்சிகள்... தத்தளிப்பு! மாதத்திற்கு ஒருமுறை வினியோகிப்பதால் மக்கள் அவதி

தினமலர்  தினமலர்
மெட்ரோ குடிநீர் நிறுத்தத்தால் புறநகர் நகராட்சிகள்... தத்தளிப்பு! மாதத்திற்கு ஒருமுறை வினியோகிப்பதால் மக்கள் அவதி

'மெட்ரோ' குடிநீர் நிறுத்தப்பட்டதால், புறநகர் நகராட்சிகள் போதிய நீராதாரமின்றி, மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் தத்தளிக்கின்றன. அனகாபுத்துாரில், மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.புறநகர் நகராட்சிகளில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏழு நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைமை மாறி, 10, 15 நாட்கள் என, அதிகரித்து தற்போது, மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.குளிக்க, துணி துவைக்க உள்ளிட்ட தேவைகளுக்கு பணம் கொடுத்து, 'டேங்கர்' லாரி தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.பல்லாவரம் நகராட்சிக்கு, நாள் ஒன்றுக்கு, 35 லட்சம் லிட்டர்; பம்மல் நகராட்சிக்கு, 30 லட்சம் லிட்டர்; அனகாபுத்துார் நகராட்சிக்கு, 15 லட்சம் லிட்டர் என்ற அடிப்படையில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.பாலாறு குடிநீர்பல்லாவரத்தை பொருத்தவரை, மெட்ரோ குடிநீர் மற்றும் பாலாறு குடிநீர் மூலம் மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள், மெட்ரோ குடிநீரையே நம்பியிருந்தன.இந்நிலையில் இந்த ஆண்டு, மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திற்கு தண்ணீரின் அளவு குறைந்ததால், புறநகர் நகராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அளவும் குறைந்தது. பல்லாவரம், பம்மல் நகராட்சிக்கு, 8 - 10 லட்சம் லிட்டர்; அனகாபுத்துாருக்கு, 5 - 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது.அதை வைத்து கொண்டு, பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நாளில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பாலாறு குடிநீர் வழங்குமாறு பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள் கோரிக்கை வைத்தன.இதையடுத்து, இரண்டு மாதங்களாக, நாள் ஒன்றுக்கு, தலா, 6 - 7 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது. இதனால், குடிநீர் பிரச்னை தீர்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், தண்ணீரின் அளவு குறைந்ததால், இந்த நகராட்சிகளுக்கு வழங்கி வந்த தண்ணீரை, மெட்ரோ வாட்டர் நிர்வாகம் நிறுத்திவிட்டது.இதனால், இந்நகராட்சிகள், பாலாறு குடிநீர்மற்றும் விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கொண்டு மக்களுக்கு வினியோகித்து வருகின்றன.தீர்வு அவசியம்புறநகரில், ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் பிரச்னை ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. அந்த சமயத்தில், குடிநீர் பிரச்னையை தீர்க்க இதை செய்கிறோம், அதை செய்கிறோம் என்று கூறும் அதிகாரிகள், மழை பெய்தவுடன் அப்படியே விட்டு விடுகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வாக, பாலாற்றில் கூடுதல் ஆழ்துளை கிணறுகளை அமைக்கவுள்ளதாக கூறுகின்றனர். கூடுதல் கிணறு அமைத்து, ஏற்கனவே உள்ள குழாயில் இணைப்பு கொடுப்பது குறித்து யோசிக்கப்பட்டது. அப்படி செய்தால், தண்ணீரின் அளவு அதிகரித்து குழாய் உடையும் என்பதால், அதிகாரிகள் குழம்பி போயுள்ளனர்.புதியதாக குழாய் அமைத்து, தண்ணீரை கொண்டு வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இதற்கு, பல மாதங்கள் ஆனாலும், நிரந்தர தீர்வாக இருக்கும் என்பது, சில அதிகாரிகளின் கருத்து.இது குறித்து, உயர் அதிகாரிகள் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் அவதிஅனகாபுத்துார் நகராட்சியில், மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, குளோரின் செய்து, வினியோகிப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், குழாய் மூலம் வரும் பாலாறு குடிநீரை அப்படியே வினியோகம் செய்யாமல், லாரிகள் மூலம் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.அப்படி செய்வதால், அதிகாரம் மிக்கவர்களும், அரசியல்வாதிகளும் அதிகம் பயனடைவதாகவும், சாதாரண மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இனியாவது, குழாய் மூலம் வினியோகிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- -நமது நிருபர் --

மூலக்கதை