குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து பார்த்தார்

PARIS TAMIL  PARIS TAMIL
குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்து பார்த்தார்

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், பனாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆறு ஓடும் பனாஸ்கந்தா, பதான் ஆகிய மாவட்டங்கள், வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளன.

இதையடுத்து, ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை ஆகியவை மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 4 விமானப்படை ஹெலிகாப்டர்கள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், உணவு பொட்டலங்கள் போடுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, படகுகள் மூலமும் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க டெல்லிக்கு சென்ற குஜராத் முதல்–மந்திரி விஜய் ரூபானி, அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வெள்ள நிலவரத்தை எடுத்துக்கூறினார். அதைத் தொடர்ந்து, வெள்ள பகுதிகளை நேரில் பார்வையிட பிரதமர் முடிவு எடுத்தார்.

அதன்படி, நேற்று மாலை பிரதமர் மோடி ஆமதாபாத்துக்கு சென்றார். விமான நிலையத்தில், மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், முதல்–மந்திரி விஜய் ரூபானி, துணை முதல்–மந்திரி நிதின் பட்டேல், முன்னாள் முதல்–மந்திரி ஆனந்திபென் பட்டேல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஒரு மணி நேர ஆலோசனைக்கு பிறகு, பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்தபடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன், விஜய் ரூபானியும் சென்றார்.

பின்னர், பிரதமர் மோடி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு உடனடி நிதி உதவியாக ரூ.500 கோடி வழங்கப்படும். வெள்ள நிலைமையை மத்திய குழு முழுமையாக ஆய்வு செய்த பிறகு, தேவையான நிதி உதவி வழங்கப்படும்.

பலியானோர் குடும்பங்களுக்கு மாநில அரசு உடனடி நிதி உதவி வழங்கியபோதிலும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

மீட்பு பணிகளுக்காக மேலும் 10 ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்படும். சொத்துகளுக்கும், பயிர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய விரைவில் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, சாத்தியமான எல்லா உதவிகளும் வழங்கப்படும்.

இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தை போல ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இங்கும் மத்திய, மாநில அரசுகள் மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன.

மூலக்கதை