கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு:உப்பளங்களில் தேக்கம்

தினமலர்  தினமலர்

ஆர்.எஸ்.மங்கலம்:மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, சப்பை, கோப்பேரிமடம், வாலிநோக்கம், நதிப்பாலம் உட்பட கடலோர பகுதிகளில் அதிகளவில் உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு உணவு பொருட்களுக்கும், இரண்டாம் தர உப்பு கருவாடு தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சுட்டெரித்து வரும் கடும் வெயிலால் இரண்டு முதல் மூன்று நாட்களில் உப்பு உற்பத்தி ஆகிவிடுகின்றன. இதனால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் உப்பு உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து திருப்பாலைக்குடியை சேர்ந்த முருகேசன் கூறுகையில், வழக்கமாக வாரத்திற்கு ஒரு முறை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வெயிலால் வாரத்திற்கு மூன்று முறை உப்பு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் உப்பு உற்பத்தி அதிகரித்து உப்பளங்களில் உப்புகள் தேக்கமடைந்துள்ளன. ஒரு டன் உப்பு ரூ 800 முதல் 1000 வரையே விற்பனை செய்யப்படுகின்றன என்றார்.சாயல்குடி: சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் மற்றும் ஏராளமான தனியார் உப்பளங்கள் உள்ளன. இந்தாண்டு போதிய பருவ மழையில்லாததால், கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால், 10 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகளவு உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
உப்பளப்பாத்திகளின் கரையோரங்களில் குன்று போல் உப்பு கொட்டி வைக்கப்படுகிறது. நாளென்றுக்கு 10 டன்னுக்கு அதிகமாக உப்பு கிடைக்கிறது. உப்பள ஊழியர்கள் கூறுகையில், இந்தாண்டு உப்பு உற்பத்தி அமோகமாக உள்ளது. உணவிற்கான உப்பு மற்றும் கெமிக்கல், உரம், ரசாயனத்தொழிற்சாலைகளுக்கு இங்கிருந்து துாத்துக்குடி உட்பட வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. இங்குள்ள அரசு மற்றும் தனியார் உப்பளத்தொழிற்சாலைகளை நம்பி வாலிநோக்கத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றனர்.

மூலக்கதை