பரிதவிப்பு:திருப்புவனம் ஒன்றியத்தில் செயல்படாதஅடி குழாய்களால் காட்சிப்பொருளாக குடிநீர் தொட்டி: தவிக்கும் மக்கள்

தினமலர்  தினமலர்

திருப்புவனம்:திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட அடிகுழாய்கள், சின்டெக்ஸ் தொட்டிகள், கூட்டு குடிநீர் திட்டங்கள் காட்சிப்பொருளாக இருப்பதால் கிராமப்புற மக்கள் பரிதவித்து வருகின்றனர். திருப்புவனம் ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் இல்லை, திருப்பாச்சேத்தி, லாடனேந்தல் உள்ளிட்ட வைகை ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் மட்டும் குடிநீர் பிரச்னை இல்லை. மற்ற கிராமங்களில் குடிநீருக்காக தினமும் மக்கள் அலைந்து வருகின்றனர். கடந்த 5 வருடங்களாக பருவமழை பெய்யாததால் வைகை ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் கூட கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராமப்புற ஊராட்சி களில் குடிநீர் மற்ற தேவைகளுக்காக ஆங்காங்கே அடி குழாய்கள், சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே போய்விட்டதால் வறண்டு போய் கிடக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு நபருக்கு 40 லிட்டர் தண்ணீர் தேவை, ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாமல் உள்ளது.
கிராமப்புற ஊராட்சிகளில் அடிகுழாய்கள், சின்டெக்ஸ் தொட்டிகள் செயல்படாமல் இருப்பது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்களுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் கிராம மக்கள் சுகாதாரமற்ற குடிநீரையே அருந்தி வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், வருடம் தோறும் கோடை காலங்களில் அரசு குடிநீர் திட்டங்களுக்கு என சிறப்பு நிதி ஒதுக்கும், இந்தாண்டு இதுவரை நிதி எதுவும் ஒதுக்கவில்லை, ஒன்றிய பொது நிதியில் இருந்து ஒரு சில பணிகளை மேற்கொண்டு வருகிறோம், நிலத்தடி நீர் வெகு கீழே போய்விட்டதால் எவ்வளவு தான் நிதி செலவு செய்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை என்றார்.
கிராமப்புற மக்கள் கூறுகையில், சின்டெக்ஸ் தொட்டி, அடி குழாய் உள்ளிட்டவைகளை 100 அடி ஆழ்துளை கிணறு அமைத்து விட்டு 200அடி என எழுதி பணம் எடுத்து விடுகிறார்கள். ஒரு சில நாட்கள் மட்டும் இயங்கிய குழாய்களில் அடுத்து தண்ணீர் வருவதேயில்லை, கானுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2015-16ம் ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் போடப்பட்ட சின்டெக்ஸ் தொட்டி ஒரு நாள் கூட இயங்கவில்லை. இதே போலத்தான் மற்ற கிராமங்களிலும் காட்சி பொருளாகவும் துருப்பிடித்தும் உள்ளன, என்றனர். எனவே குடிநீர் திட்டங்களுக்கு செலவு செய்யப்படும் நிதி முறையாக செய்யப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்திஉள்ளனர்.

மூலக்கதை