காட்டுப்பன்றிகளால் வாழை மரங்கள்...சேதம்:வேதனையில் விவசாயிகள்

தினமலர்  தினமலர்

தேவதானப்பட்டி:தர்மலிங்கபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மரங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.பெரியகுளம் தாலுகா சில்வாா்பட்டி, தர்மலிங்கபுரம் விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ளது. வாழை, பூ , நிலக்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மலைப்பகுதியில் மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தேவையான உணவு, நீர் கிடைக்கவில்லை. அவற்றைத்தேடி காட்டுமாடு, காட்டுப் பன்றிகள் மலையடிவாரப் பகுதிக்கு வந்து செல்கின்றனபாதிப்பு காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின் றன. நடவு செய்து 3 மாதங்கள் ஆன வாழைசாகுபடி நிலத்தில் மரங்களை சேதப்படுத்தி பன்றிகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.தா்மலிங்கபுரம் வாழை விவசாயி லிங்கப்பன் கூறுகையில், ''நீர் மற்றும் உணவுக்காக வரும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் உள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.மழை பொய்த்து நீர் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு விவசாயப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில் விலங்குகளால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மிகவும் வேதனையாக உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்

மூலக்கதை