மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்அதிகரிப்பு:கஷாயம் வழங்கல், சுகாதாரப்பணிகள் மந்தம்

தினமலர்  தினமலர்
மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்அதிகரிப்பு:கஷாயம் வழங்கல், சுகாதாரப்பணிகள் மந்தம்

மதுரை:மதுரை மாவட்டத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்குதல் மற்றும் சுகாதாரப் பணிகள் மந்தமாக நடப்பதால் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.மாவட்டத்தில் உள்ள 48 ஆரம்ப சுகாதார நிலையம், 11 அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டு, 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மேலுார் தாலுகாவிற்கு உட்பட பல கிராமங்களில் சுகாதாரமின்மையால், கொசுக்களின் மூலம் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவியுள்ளது. இதில், சிறுமி ஒருவர் பலியானார். திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியை சேர்ந்த பிரவீன் என்ற சிறுவனுக்கு டெங்கு அறிகுறி தென்பட்டு, அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இது போன்று, 12க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு அறிகுறியால் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக, மருத்துவதுறையினர் தெரிவிக்கின்றனர்.
கிடப்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கும்பணி
ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய், குப்பைகள் மற்றும் சிரட்டை, டயர்களில் சேகரமாகும் தண்ணீரை அப்புறப்படுத்தாமல் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. மேலும், பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைகளில் டெங்கு நோயை தடுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்படவில்லை. இது குறித்து சுகாதாரத்துறையினரிடம் கேட்டால், நிலவேம்பு கஷாயம் போதிய அளவு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், எந்த குழந்தைகளுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் டெங்கு அதிகளவில் பரவிவிடாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறுகையில், ''மேலுார் அருகே சிறுமி இறந்ததால், அப்பகுதிக்குட்பட்ட கிராமங்களில் துப்புரவு பணி, மருந்துகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம். நிலவேம்பு கஷாயம் வேண்டிய அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை