சிக்னல் லைட் சேதமாகி மாதம் ஐந்து ஆகியும் சீரமைப்பை காணோம்: தவிப்பில் விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி மேற்கு பகுதி மக்கள்

தினமலர்  தினமலர்

விருதுநகர்;விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி மேற்கு பகுதி தபால் தந்தி காலனியில் பல ஆண்டுகளாக தார் காணாத ரோடு உள்ளது. மெயின்வாறுகால், தெரு வாறுகால் பராமரிப்பின்றி இருப்பதால் சுகாதார கேடும் ஏற்படுகிறது.சிவஞானபுரம் ஊராட்சியை சேர்ந்த இப்பகுதியில் தபால் தந்தி காலனி, வ.உ.சி தெரு, விவேகானந்தர் தெரு போன்ற தெருக்கள் உள்ளன. வளர்ந்து வரும் பகுதியாக இருந்தும் அதற்கேற்ப அடிப்படை வசதி பணிகள் நடக்கவில்லை. தெருக்களில் தார்ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆனதால், கற்கள் தான் தெரிகிறது. இதில் நடமாட முடியாமல் மக்கள் சிரமப்படுகி்ன்றனர். தபால் தந்தி காலனி அருகே தரைப்பாலத்தின் தடுப்புசுவர் இடிந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இரவில் கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த லாரி உரசியதால் சேதமானது என மக்கள் தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட லாரி டிரைவரிடம் விசாரி்த்து, பாலத்தை சீரமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை விடுதி எதிரே நான்குவழிச்சாலையில் இருந்து சர்வீஸ் ரோடு செல்ல வசதி உள்ளது. இதன் வழியாக விருதுநகர் ஊருக்குள் வரும் வாகனங்களும், விருதுநகரில் இருந்து நான்குவழிச்சாலை செல்லும் வாகனங்களும் சென்று வருகின்றன. சர்வீஸ்ரோடு பிரிவு இருப்பதை குறிக்கும் வகையில் சிக்னல் லைட் இருந்தது. ஐந்து மாதம் முன், விபத்தில் இந்த லைட் தரைமட்டமானது. சீர் செய்யாததால் இரவில் விபத்து நடக்கின்றன. நெடுஞ்சாலை துறை, போலீஸ் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. பொதுப்பணித்துறை விடுதிக்கு வி.ஐ.பி., க்கள் வந்து தங்கும்போது மட்டும், அவர்களது வசதிக்காக, போக்குவரத்து போலீசார் நிறுத்தப்படுகின்றனர். மற்ற நேரங்களில் கண்டுகொள்வதில்லை. பொதுமக்கள் உயிர் பற்றி சிறிதும் கவலையில்லை என்கின்றனர் இப்பகுதியினர்.
பராமரிப்பில்லா வாறுகால் விஜயசங்கர்: என்.ஜி.ஓ., காலனி மேற்கு பகுதி கூரைக்குண்டு ஊராட்சியின் எல்லையில் உள்ளது. அதேவேளை நகராட்சி பகுதி அருகே உள்ளது. இங்கு தெரு வாறுகால் பராமரிப்பின்றி உள்ளன. இந்த வாறுகால் கழிவுகள் வெளியேறும்படி சர்வீஸ் ரோட்டில் பிரதான வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கழிவுதண்ணீர் அப்பகுதியில் தேங்காமல் கடந்து செல்ல வசதி உள்ளது. சர்வீஸ் ரோடு பிரதான வாறுகாலும் பராமரிப்பின்றி உள்ளது. மழைகாலங்களில் ரோட்டில் பெய்யும் மழைநீர், இந்த வாறுகால் வழியாக தான் வெளியேறும். இது பராமரிப்பின்றி உள்ளது. மண் மேடாக, சில இடங்களில் செடிகொடிகள் வளர்ந்து உள்ளன. இவற்றை அகற்றி முறையாக பராமரிக்க உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். சுகாதாரகேடு என்பது இப்பகுதி மக்களுக்கு மட்டுமில்லாமல், இவ்வழியாக செல்பவர்களையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொசுத்தொல்லை தாங்க முடியலஅருணா:விவேகானந்தர் தெருவில் வாறுகால் அமைத்து பல ஆண்டுகளாகிவிட்டது. வாறுகால் கழிவுதண்ணீர் வெளியேற வழியில்லாமல் ஆங்காங்கே தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாகிறது. வீட்டு ஜன்னல்களில் கொசு வலை அடிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மழை காலத்தில் ரோட்டில் தேங்கும் மழைநீருடன் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்திக்கும் வாய்ப்பு உள்ளது. அதற்குள் வாறுகாலை சுத்தம் செய்து கழிவுநீர் வெளிறே நடவடிக்கை எடுக்கவேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க சீரமைப்பு பணியை துவக்கவேண்டும். அதிகாரிகள் விசிட் தேவை மனோகரன்: தபால் தந்தி காலனி 1970 ல் உருவானது. என்.ஜி.ஓ., காலனி வரும் முன்னே இந்த காலனியில் வீடுகள் வந்துவிட்டன. இப்பகுதியில் ரோடு அமைத்து, வாறுகால் சீரமைக்கும் பணி நடந்து பல ஆண்டுகளாகிறது. இப்பகுதியில் துாண்கள் சேதமான மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதை சீரமைக்க பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. உயர்அதிகாரிகள் உத்திரவிட்டும் இப்பகுதியில் அடிப்படை வசதி பணிகள் நடக்கவில்லை. சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். குப்பை அதிகமாகும்போது அவற்றை அகற்ற அதிகாரிகளிடம் முறையிட வேண்டி உள்ளது. அதன் பின்னும் பாதி குப்பை தான் அள்ளுகின்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அதிகாரிகள் அடிக்கடி விசிட் செய்தால் இப்பகுதி பணிகள் சீராக நடக்கும். கல் நிறைந்த தார்ரோடு செல்வராஜ்: அருகே பஸ் ஸ்டாப் உள்ளதால் பலர் வாடகை வீடுகளில் குடியேற வருகின்றனர். ரோட்டின் நிலையை பார்த்து பின்வாங்குகின்றனர். பல ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த ரோட்டில் தற்போது கற்கள், மண் தான் உள்ளன. இங்கிருந்தது தார்ரோடா, சிமென்ட் ரோடா என யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்தளவிற்கு மோசமாக உள்ளது. டூ-வீலரில் செல்பவர்கள் தடுமாறுகின்றனர். இரவில் நடமாட முடியவில்லை. குழந்தைகள் தெருவில் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். ரோடு உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.



மூலக்கதை