ஜெருசலேம் மசூதியில் கெடுபிடி வாபஸ் பெற்றது இஸ்ரேல்

தினமலர்  தினமலர்
ஜெருசலேம் மசூதியில் கெடுபிடி வாபஸ் பெற்றது இஸ்ரேல்

ஜெருசலேம்: இஸ்ரேலில், பாலஸ்தீனியர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, அங்குள்ள, அல் - அக்சா மசூதியில், பாதுகாப்பு கெடுபிடிகளை திரும்ப பெற, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேலும், பாலஸ்தீனமும், ஜெருசலேம் நகருக்கு உரிமை கொண்டாடி வருகின்றன; அந்த நகரின் பெரும் பகுதியை, இஸ்ரேல், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
முஸ்லிம்களின் புனித மசூதிகளில் ஒன்றான அல் - அக்சா, இங்கு அமைந்துள்ளது. இங்கு, சமீபத்தில், பாலஸ்தீனியர்கள், மூன்று பேர் துப்பாக்கிசூடு நடத்தியதில், இரண்டு போலீசார் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த மசூதிக்கு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுஉள்ளது; மசூதிக்குள் செல்வோர், 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம், சோதித்து, அனுமதிக்கப்பட்டனர்.
'இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, மசூதியை ஆக்கிரமிக்கும் முயற்சி' எனக் கூறி, பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தினர். பாதுகாப்பு கெடுபிடிகளை வாபஸ் பெறும்படி, ஜோர்டான் மன்னர்
அப்துல்லா, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்தினார்.இதையடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகளை வாபஸ் பெறுவதாக, இஸ்ரேல் நேற்று அறிவித்தது. இஸ்ரேலின் இந்த முடிவை, பாலஸ்தீனியர்கள் வரவேற்றுள்ளனர். அதேசமயம், 'கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட மாற்று வழிகளில் சோதனை தொடர்ந்து நடக்கும்' என, இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை