இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்: காலேவில் நாளை தொடக்கம்

தினகரன்  தினகரன்

காலே: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், 5 ஒரு நாள், ஒரே ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, காலேவில் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக இலங்கை வாரிய தலைவர் லெவனுடன், 2 நாள் பயிற்சி போட்டியில் இந்தியா விளையாடியது. டிராவில் முடிந்த இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ் 4, ரவீந்திர ஜடேஜா 3, முகமது ஷமி 2 விக்கெட்களை வீழ்த்தினர். லோகேஸ் ராகுல், கேப்டன் கோஹ்லி அரை சதம் விளாசினர். தோள் பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த லோகேஸ் ராகுல், ஐபிஎல், சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடர்களில் விளையாடவில்லை. அதில் இருந்து மீண்டுதான் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்க வந்தார். ஆனால் தற்போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், முதல் டெஸ்டில் அவர் விளையாட மாட்டார். 2வது டெஸ்டில் லோகேஸ் ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியின் மற்றொரு வழக்கமான தொடக்க வீரரான முரளி விஜய், மணிக்கட்டு காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்தே விலகி விட்டார். இதனால் ஷிகார் தவான்-அபினவ் முகுந்த் ஆகியோர் முதல் டெஸ்டில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி போட்டியில் டக் அவுட்டான அபினவ் முகுந்த் தமிழகத்தை சேர்ந்தவர். புஜாரா, ரஹானே உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்கள் இருப்பதால், லோகேஸ் ராகுல், முரளி விஜய் இழப்பை இந்தியா எளிதாக ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய மண்ணில் மிகவும் அபாயகரமானவரான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இது 50வது டெஸ்ட் போட்டியாகும்.  மறுபக்கம் இலங்கை அணி சற்று பலவீனமாக காணப்படுகிறது. சொந்த மண்ணில் சமீபத்தில் நடந்த கத்துக்குட்டி ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என இழந்ததால், கேப்டன் பதவியை ஏஞ்சலோ மேத்யூஸ் ராஜினாமா செய்தார். இதனால் புதிய டெஸ்ட் கேப்டனாக தினேஷ் சண்டிமால் அறிவிக்கப்பட்டார். நிமோனியா காய்ச்சல் காரணமாக முதல் டெஸ்டில் அவர் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் கேப்டன் பொறுப்பை கவனிப்பார். எனினும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை வென்ற நம்பிக்கையில் இலங்கை களமிறங்கும். அந்த போட்டியில் 388 ரன்கள் இலக்கை சேஸ் செய்து இலங்கை போராடி வென்றது. இந்திய அணி கடைசியாக 2015ம் ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையே கடைசியாக நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 3ல் இந்தியா வென்றுள்ளது. ஒன்றில் மட்டுமே இலங்கை வென்றுள்ளது. இந்த நம்பிக்கையுடன் இந்தியா களமிறங்கும். புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் முதல் அசைன்மென்ட் என்பதால், இந்த தொடர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. சாதனைகள்: * இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்தியா 16, இலங்கை 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 15 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.* இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 952/6. 1997 கொழும்பு டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை இந்த இமாலய ஸ்கோரை பதிவு செய்தது. 2009 மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில்  எடுக்கப்பட்ட 726/9 என்ற ஸ்கோரே இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்சம்.* 1990 சண்டிகர் டெஸ்டில் இலங்கை 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் பதிவான குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். 2015 காலே டெஸ்டில், 112 ரன்களுக்கு சுருண்டதே இலங்கைக்கு எதிராக இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர்.* இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் இந்தியாவின் சச்சின். சச்சின் 36 இன்னிங்சுகளில் 1,995 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.45. அதிகபட்சம் 203. இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இலங்கை வீரர் மகிளா ஜெயவர்த்தனா. அவர் 28 இன்னிங்சுகளில் 1,822 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சம் 275. சராசரி 67.48.* 1997 கொழும்பு டெஸ்டின் முதல் இன்னிங்சில், இலங்கையின் ஜெயசூர்யா 340 ரன்கள் குவித்தார். இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில், ஒரு இன்னிங்சில் தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்தியா சார்பில் வீரேந்திர சேவாக் 293 ரன்கள் குவித்துள்ளார். 2009 மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் வீரேந்திர சேவாக் இந்த ரன்களை எடுத்தார்.* இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் இலங்கையின் முரளிதரன். அவர் 32 இன்னிங்சுகளில் 105 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் கும்ப்ளே. அவர் 28 இன்னிங்சுகளில் 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். * 2001 கொழும்பு டெஸ்டின் முதல் இன்னிங்சில், முரளிதரன் 87 ரன்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தினார். இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில், ஒரு இன்னிங்சில் பதிவான சிறந்த பந்து வீச்சு இதுவே. 1986 நாக்பூர் டெஸ்டின் 2வது இன்னிங்சில், மனீந்தர் சிங் 51 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இலங்கைக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சு.

மூலக்கதை