காத்திருப்பு:தாமதமாக திறக்கப்படும் ரேஷன் கடைகளில் 11:00 மணி முதல் மாலை 5:00 வரை மட்டுமே பணி

தினமலர்  தினமலர்

காரைக்குடி:கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகள் காலை 11:00 மணிக்கு பிறகே திறக்கப்படுவதால், நுகர்வோர் கடை வாசலில் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.மாவட்டத்தில் எட்டு தாலுகாக்களில் 827 நியாய விலைக்கடைகள் உள்ளன. 3 லட்சத்து 81 ஆயிரத்து 985 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
பி.ஓ.எஸ்., கருவி மூலம் பதிவு செய்யப்பட்டு நுகர்வோருக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. காலை 9:00 மணி முதல் பகல் ஒரு மணி வரையும், பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் பொருட்கள் வழங்க வேண்டும்.மொத்த கடைகளில் 70 சதவீத கடைகள் கிராமப்புறத்தில் உள்ளன. கிராமங்களில் 11:00 மணிக்கு மேல் தான் கடைகளை விற்பனையாளர்கள் திறக்கின்றனர்.
ஒரு சில பகுதிகளில் மதியம் ஒரு மணிக்கு மேல் தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டும், எனக் கூறி கடையை பூட்டி சென்று விடுகின்றனர். மறுபடி வருவதில்லை. இதனால், ரேஷன் கடை வாசலில் 9:00 மணி முதல் பெண்கள் வெயிலில் காத்திருக்கின்றனர்.தற்போது வழங்கப்பட்டுள்ள பி.ஓ.எஸ்., கருவியில் கடையில் பில் போடும் நேரம், எந்த பகுதி என்பது உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றிருந்தாலும், சென்னையில் அவற்றை சரிபார்ப்பவர்கள், எத்தனை கார்டுக்கு, எவ்வளவு பொருள் வினியோகிக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே பார்க்கின்றனர். ரேஷன் கடை ஊழியர்கள் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பி.ஓ.எஸ்., கருவியை வீட்டில் இருந்தே ஆனில் வைத்திருப்பதால், அதிகாரிகள் அவர்கள் கடையில் தான் உள்ளனர் என்பதை ஊர்ஜிதப்படுத்தி கொள்கின்றனர்.
இலுப்பக்குடி பொதுமக்கள் கூறும்போது: ரேஷன் கடை காலை 10.30 மணிக்கு பிறகே திறக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் 11:00 மணியாகி விடுகிறது. இவற்றை ஆய்வு செய்ய வேண்டிய கூட்டுறவு, வருவாய் துறை அதிகாரிகள் வருவது இல்லை. அதிகரித்து வரும் வெயிலில் ரேஷன் கடையில் நின்றால் மயக்கமே வந்து விடுகிறது. எனவே, காலை முதல் மாலை வரை கடை திறந்திருப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், என்றார்.

மூலக்கதை