நெடுங்குளம் கண்மாயில் மண் திருட்டு:அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

தினமலர்  தினமலர்

தேவதானப்பட்டி:மேல்மங்கலம் அருகே நெடுங்குளம் கண்மாயில் டிராக்டர் மற்றும் டயர் மாட்டு வண்டிகள் மூலம் தொடர்ந்து மண் திருடப்படுவதால் கணிமவளம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மண் திருட்டை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மேல்மங்கலம் அருகே நெடுங்குளம் கண்மாய் உள்ளது. பரந்து விரிந்த இக்கண்மாய்க்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கும்பக்கரை, பாப்பாற்று வழியாக தண்ணீர் வந்து சேருகிறது. ஒரு முறை தேங்கும் தண்ணீர் இரண்டு ஆண்டுகள் வரை வற்றாமல் இருக்கும். இக்கண்மாயை நம்பி மேல்மங்கலம், வடுகபட்டி கிராமங்களை சூழ்ந்துள்ள ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் கண்மாயை மையப்படுத்தி ஒரு கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாய கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைத்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் விசாயம் செழிப்படைந்து வருகிறது. தற்போது மழை இல்லாததால் நீர்ப்பிடிப்பு பகுதியில் மண்மேடாக காட்சியளிக்கிறது. இதைப்பயன்படுத்தி மண் திருட்டு நடந்து வருகிறது. இங்கு திருடப்படும் மண் காளவாசல் மற்றும் பிற தேவைகளுக்காக கடத்தப்பட்டு வருகிறது.
மாட்டு வண்டி மூலம் மண் திருட்டு: கடந்த 2 ஆண்டுகளாக நெடுங்குளம் கண்மாயில் நீர்ப்பிடிப்பு பகுதியில் இரவு, பகல் பாராமல் டிராக்டர் மற்றும் டயர் மாட்டு வண்டிகள் மூலம் தொடர்ந்து மண் திருட்டு நடக்கிறது. இதன் மூலம் 4 ஏக்கர் பரப்பளவில் 10 அடி ஆழம் ஏற்பட்டுள்ளது. மண் திருட்டில் ஈடுபடுபவர்கள் வருவாய் துறையினரை மாதந்தோறும் 'கவனித்து' விடுவதால் இதுபற்றி அவர்கள் கண்டுகொள்வதில்லை.
அப்பகுதி விவசாயிகள் கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என, புலம்புகின்றனர். அதேநேரத்தில் தகவல் தரும் விவசாயிகளை மண் திருட்டு கும்பல் மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளில் விவசாயிகள் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கண்மாயில் நீர் ஆதாரம் மற்றும் கணிம வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ---

மூலக்கதை