பராமரிப்பு மானியம் இன்றி ஊராட்சிகள்தவிப்பு: 'பூஜ்யத்துக்குள் ராஜ்யம்' நடத்தும் அவலம்

தினமலர்  தினமலர்

வடமதுரை:வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த மூன்று மாதங்களாக பராமரிப்பு மானியம் வழங்காததால் அவசர பணிகளையும் நடத்த இயலாமல் தவிக்கின்றனர். மாநில நிதிக்குழு மானிய நிதியில் இருந்து தமிழக அரசு ஊராட்சி செலவினங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் வழங்குகிறது.
ஊராட்சிகளின் மக்கள் தொகை அடிப்படையில் இத்தொகை மாறுபடும். இதனை கொண்டு தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அவசிய பணிகளுக்கும், மேல்நிலை தொட்டி இயக்குனர்கள், துப்பரவு ஊழியர்கள் சம்பளத்திற்கும் செலவிடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக இதில் 35 சதவிகிதம் வரை குறைத்து நிதிவழங்குகின்றனர். இதனால் ஊராட்சிகளில் நிதி நெருக்கடி தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், தற்போது ஏ.பி.டி.ஓ., மற்றும் செயலர்களே ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்கின்றனர்.
தற்போது பராமரிப்பு மானிய நிதியில் இருந்து மின்கட்டணம், ஊழியர் சம்பளத்திற்கு முன்னுரிமை தந்து, அந்தந்த கணக்கில் வரவு செய்யப்படுகிறது. இதனால் ஊராட்சிகளுக்கு பொது நிதி மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. வடமதுரை ஒன்றியத்தில் சிங்காரகோட்டை ஊராட்சிக்கு ரூ.3 ஆயிரம் அளவிலும், வேலாயுதம்பாளையத்திற்கு 'பூஜ்யம்' என்ற கணக்கிலும் நிதிஒதுக்கப்பட்டுள்ளது.
வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு 'பூஜ்யம்' வழங்கப்படுவது இது மூன்றாவது முறை. இதனால் வேலாயுதம்பாளையத்தில் குடிநீர், தெருவிளக்கு, சுகாதார பணிகளுக்கு கடைகளில் கடன் சொல்லி பொருட்களை வாங்கி பணி செய்கின்றனர். ஏற்கனவே வறட்சியால் குடிநீர் பிரச்னை அதிகளவில் இருக்கும் நிலையில், இவ்வாறு 'பூஜ்யம்'நிதி ஒதுக்கினால் என்னசெய்வது என ஊராட்சி பணியாளர்கள் புலம்புகின்றனர்.

மூலக்கதை