தினமும் அவதியே: ரோட்டோரங்களில் குவிந்து கிடக்குது 'புழுதி'காற்றில் பறக்கும் தூசியால் பலரும் எரிச்சல்

தினமலர்  தினமலர்

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் ரோடுகளில் புழுதி மண் பரவி கிடக்கிறது. இதை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினரும் அக்கறை காட்டாததால்,காறறில் பறவும் துாசியால் மக்கள் தினந் தோறும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சாத்துார், அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் என முக்கிய நகராட்சிகளில் உள்ள மெயின்ரோடுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டு நடுவில் டிவைடர் கட்டப்பட்டது. இதற்காக ரோட்டின் ஒரத்தில் இருந்த நுாறு ஆண்டுகள் பழமையான மரங்கள் எல்லாம் வெட்டி அகற்றப்பட்டன.ரோடு அகலப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஒரளவு சீரானது. ஆனால் முறையாக தார் ரோடுஅமைக்கப்படவில்லை. மழை பெய்யும் நேரத்தில் ரோட்டில் இருந்து தண்ணீர் வாறுகால்களுக்கு செல்லாமல் ரோட்டில் செல்கிறது. இதனால் ரோட்டின் ஓரத்தில் இருந்த மண் மேடு கறைந்து ரோட்டில் படிய துவங்கின. மண் ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து சிதறும் மணலும் ரோட்டில் சேரத்துவங்கியதால் தற்போது மெயின்ரோடு முழுவதும் புழுதி மண் படிந்துள்ளது. புகை மூட்டம்
இவற்றை நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் தான் அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினரும்,சாலைப்பணியாளர்கள் தான் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகமும் கூறி வருவதால் புழுதி மண் அதிகமாக சேர்ந்துள்ளது. தற்போது ஆடி மாதம் துவங்கிய நாள் முதல் மாவட்டம் முழுவதும் அனல் காற்று வீசுகிறது. இதனால் ரோட்டில் உள்ள புழுதி மண் காற்றுக்கு பறந்து புகை மூட்டம் எழுகிறது. வேகமாக செல்லும் பஸ்கள், லாரிகளாலும் துாசி கிளம்புகிறது.
ரோட்டில் நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்ணில் துாசி விழுவதால் கண் எரிச்சல் ஏற்படுவதுடன் பலர் தடுமாறி கீழே விழுகின்றனர்.
வயிற்றுக்கோளாறுரோட்டின் ஓரத்தில் நடத்தப்படும் சிற்றுண்டி உணவகங்களும் துாசி மண்டலத்தால் பாதிக்கின்றன. உணவு பண்டங்களிலும் துாசி படிவதால் பலரும் வயிற்றுக்கோளாறு ஆளாகி தவிக்கும் நிலை உள்ளது.புழுதி பறக்கும் சாலையை பார்த்து அருவருப்பு அடையும் சிலர் குடைகளை பிடித்து செல்லும் நிலையும் உள்ளது.
இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் மூக்கில் துாசி ஏறுவதை தடுக்க முகத்தை மூடியபடி பயணிக்கும் நிலையும் உள்ளது.காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கும் செல்லும் மாணவர்கள் துாசியால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.பல மாணவர்கள துாசியால் நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். மெயின்ரோட்டில் குவிந்து கிடக்கும் புழுதி மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுங்க
சாத்துார் என்.அய்யாச்சாமி, ''மாவட்டத்தில் உள்ள ரோடுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ரோட்டினை அகலப்படுத்தும் போது சரியான முறையில் தார்அமைக்கப்படாததால் மணல் குவிந்துள்ளது.வாகனங்கள் செல்லும்போது இவை துாசியாக பறப்பதால் சாலையோரத்தில் கடைகள் நடத்துபவர்களும், பாதசாரிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.ஆடி மாதகாற்றுக்கு அம்மியே பறக்கும் என்பார்கள். ரோட்டில் உள்ள துாசி எம்மாத்திரம்.முதியவர்கள், முதல் சிறியவர்கள் வரை பலர் பாதிக்கின்றனர். சாலையோர உணவகங்கள் கடுமையாக பாதிக்கின்றன. உணவு பண்டங்களில் துாசி படிந்து சுகாதாரகேடு ஏற்படுகிறது.ரோட்டில் உள்ள குப்பையை அகற்றுவது போன்று புழுதி மண்னையும் அகற்றுவதன் மூலம் சுகாதாரவாழ்வுக்கு வழி பிறக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

மூலக்கதை