எதிர்ப்புகளுக்கிடையே நந்தி ஓடை குடியிருப்புகள்தரைமட்டம்! நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணிக்காக அதிரடி

தினமலர்  தினமலர்
எதிர்ப்புகளுக்கிடையே நந்தி ஓடை குடியிருப்புகள்தரைமட்டம்! நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணிக்காக அதிரடி

திருவொற்றியூர்:திருவொற்றியூரில், ரயில்வே விரிவாக்க பணிக்காக, 150-க்கும் மேற்பட்டகுடியிருப்புகள் எதிர்ப்புகளுக்கிடையே இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.சென்ட்ரல் - கும்மிடிப் பூண்டி வரையில், நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக, ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகள் அகற்றப்பட்டன.நந்தி ஓடை, ஒத்தவாடை, திரு.வி.க., நகர், ஆல் இந்தியா ரேடியோ நகர் போன்ற பகுதிகளில் இருக்கும், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட இருந்தன.
இந்த ரயில்வே பணியால் வீடு இழப்போருக்கு, வருவாய் துறை சார்பில், கும்மிடிபூண்டி, மாதர்பாக்கம் பகுதியில், தலா 2 சென்ட் இடம் கொடுத்து இருப்பதாக தெரிகிறது. சென்னையிலிருந்து, 30 கி.மீ., துாரத்தில் உள்ள அப்பகுதியில், பள்ளி, கல்லுாரி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை.
போராட்டம்
இதனால், படிக்க செல்லும் பிள்ளைகள், வேலைக்கு செல்வோர் கடும் சிரமப்பட வேண்டி இருக்கும் என்பதால் இப்பகுதிவாசிகள், புதிதாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல மறுத்து வந்தனர்.இதை தவிர்த்து, தாசில்தார் அலுவலகம் முற்றுகை மற்றும் காத்திருப்பு போராட்டம், இரவு தங்கி உணவு சமைத்து உண்பது போன்ற பல போராட்டங்கள் செய்து வந்தனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், இரவு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம், ஆர்.டி.ஓ., பேசியதைஅடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்ற தாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சில், குடியிருப்புவாசிகள், ஒரு மாத கால அவகாசம் கேட்டனர்; அதிகாரிகள், பரிசீலிப்பதாக கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை, திருவொற்றியூர் போலீசார், ரயில்வே போலீசார், ரயில்வே ஊழியர்கள் என, 400க்கும் மேற்பட்டோர் புடைசூழ, பலத்த பாதுகாப்புடன், 10:45 மணிக்கு, ஐந்து ஜே.சி.பி., இயந்திரங்களுடன் ஆக்கிரமிப்புகளை இடிக்க துவங்கினர்.
அதிர்ச்சி
இதனால், செய்வதறியாது திகைத்த குடியிருப்புவாசிகள், வீட்டினுள் இருந்த பொருட்களை பாதி எடுத்தும் எடுக்காமலும், கண்ணீருடன் வெளியேறினர்.அப்போது, ஒரு மாதம் அவகாசம் கேட்ட போது, பரிசீலிப்பதாக கூறி விட்டு, இப்போது திடீரென குடியிருப்புகளை அவசர அவசரமாக இடித்து தள்ள, வருகின்றனர். இதனால் பலர் உைடமை களை இழந்துவிட்டோம். வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றுகின்றனர் என, இப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டினர்.பல ஆண்டுகளாக வசித்த வீடுகள் தரைமட்டமாவதை கண்டு, இப்பகுதிவாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இன்னும் சிலர் வீடுகளின் ஓடுகளை முடிந்த வரை கழற்றி பத்திரப்படுத்தினர்.
ஒரு பகுதியில் வீட்டிற்குள் பொருட்கள் எடுத்துக் கொண்டிருந்த போது, திடீரென ஜே.சி.பி., இயந்திரம் வீட்டை இடித்துக் கொண்டு புகுந்ததால், வீட்டினுள் இருந்த பலர் அலறி அடித்து ஓடி வந்தனர். அப்போது, அதிகாரிகளை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தனர்.நந்தி ஓடை முதல் கிராமத்தெரு வரை, 160 குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

மூலக்கதை