அரசு மருத்துவமனைகள் மேம்பாட்டுக்கான குழு காணவில்லை! கடிவாளம் இல்லாததால் புகார்கள் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
அரசு மருத்துவமனைகள் மேம்பாட்டுக்கான குழு காணவில்லை! கடிவாளம் இல்லாததால் புகார்கள் அதிகரிப்பு

கோவை, ஜூலை 24-- அனைத்து தரப்பு அரசு மருத்துவமனைகளின் தரம், நிர்வாக முறைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனை ஆலோசனை குழுக்கள், இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. போதுமான நிதி ஒதுக்கி, மீண்டும் இக்குழுக்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில், 22 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளின் நிர்வாக நடைமுறைகளை, அந்தந்த கல்லுாரிகளின் டீன் கவனித்து வருகிறார். மத்திய, மாநில அரசின் சுகாதார துறை சார்பில், அறிவிக்கப்படும் சுகாதார திட்டங்கள் இவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளின் செயல்பாடுகளை, மருத்துவ கல்வி இயக்குனர் அவ்வப்போது கண்காணித்து வருகிறார். இது தவிர, மாநிலங்களில் உள்ள அனைத்து தரப்பு மருத்துவமனைகளையும், பொது சுகாதாரம், மருத்துவ சேவை, உள்ளிட்ட பல்வேறு சுகாதார துறை அலுவலர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து வருகின்றனர்.அனைத்து தரப்பு அரசு மருத்துவமனைகளிலும், வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் தரம், நிர்வாக முறை, செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை அவ்வவ்போது ஆய்வு செய்ய மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவமனை ஆலோசனைக்குழுவும், பிற மருத்துவமனைகளில் மாவட்ட ஆலோசனைக்குழுவும், 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது.மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கான, மருத்துவ ஆலோசனைக்குழுவில், மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர், அப்பகுதி எம்.எல்.ஏ., தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மக்கட்பணி ஆர்வலர்கள், என, 11 பேர் அடங்கிய குழுவினர் இருப்பர். பிற மருத்துவமனைகளுக்கான மாவட்ட ஆலோசனை குழுவில், கலெக்டர், சுகாதார பணிகள் இணை இயக்குனர், எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்ட, 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பர்.இவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், கூடி மருத்துவமனை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள், நிதி, மருத்துவ சேவையின் தரம், நோயாளிகள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து ஆலோசித்து, அதற்கேற்றார் போல் நிதி பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டிய, சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.இதன் மூலம் அரசிடம் இருந்து நிதி பெறுவது, தேவையான நிதியை தனியார் நிறுவனத்திடம் இருந்து பெறுவது, சுகாதாரம் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை இக்குழுக்கள் மேற்கொண்டு வந்தன. ஆனால், கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேல் இக்குழுக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. இதனால் மருத்துவமனைகளை கண்காணிக்கும் திட்டம் நிறைவேறவில்லை. குழுக்கள் அழிந்து விட்டதால், மருத்துவமனையின் மேம்பாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை, அந்தந்த மருத்துவமனைகளே கவனிக்க வேண்டியதாயிற்று. நோயாளிகளின் புகார்களும், சிகிச்சையின் தரமும் கவனிக்கப்படவில்லை. இதன் மூலம் மருத்துவமனைகள், கண்காணிப்பு இன்றி செயல்பட துவங்கியுள்ளன. மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காகவும், நோயாளிகளின் நலன் காக்கவும், இக்குழுக்கள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாநில மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ கூறியதாவது:மருத்துவமனைகளின் செயல்பாடுகள், தரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கண்காணிக்க குழுக்கள் உருவாக்கப்பட்டன. இக்குழுக்கள் செயல்படுவதற்காக, 10 லட்சம் ரூபாயை, மத்திய அரசு வழங்கி வந்தது. இந்நிதியை கொண்டு மருத்துவமனைகளுக்கு தேவையான சிறு மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நாளடைவில், இந்நிதியை மத்திய அரசு, கர்ப்பிணிகள் மற்றும் தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான திட்டத்துக்கு மாற்றியது. குழுக்கள் செயல்படுவதற்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் நன்கொடை பெற்று குழுக்கள் செயல்பட அறிவுறுத்தியது.நிதி நிறுத்தப்பட்டதால், செயல்பட வழியின்றி குழுக்கள் மறையத் துவங்கின. தற்போது பல மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் பிற மருத்துவமனைகளில் இக்குழுக்கள் இல்லை. ஒருசில மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் மட்டும், அந்தந்த மருத்துவமனைகளின் டீன் விருப்பத்தால் இயங்கி வருகின்றன. நிதி கிடைத்தால் மட்டுமே குழுக்களை மீண்டும் நிறுவ முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை