பற்றாக்குறை:கிடப்பில் வணிக வளாக கட்டட திட்டம் :வருமானத்துக்கு திண்டாடும் நகராட்சி

தினமலர்  தினமலர்

காரைக்குடி:காரைக்குடி நகராட்சி எதிர்புறம் உள்ள 55 சென்ட் இடத்தில், ரூ.5 கோடியில் வணிக வளாகம் கட்டுவதற்கான பரிந்துரை அனுப்பியும், அரசு செவி சாய்க்காததால், நகராட்சிக்கு வர வேண்டிய வருமானத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.காரைக்குடி நகராட்சி மூன்றாம் நிலை நகராட்சியாக 1928-ல் தொடங்கப்பட்டு, 1974-ல் இரண்டாம் நிலை, 1979-ல் முதல் நிலை, 1988-ல் தேர்வு நிலை, 2013ல் சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
2011-ம் ஆண்டு கணக்கின்படி மக்கள் தொகை 1,06,793.தற்போதைய ஆண்டு வருமானம் ரூ.23 கோடிக்கும் அதிகம். போதுமான வரி வருவாய், மக்கள் தொகை இருப்பதால் மாநகராட்சியாகும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளது. மாநகராட்சியாகும் பட்சத்தில் அருகில் உள்ள சங்கராபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி ஊராட்சிகள், கோட்டையூர் பேரூராட்சிகள் இதனுடன் இணையும்.தற்போதைய மொத்த வருமானத்தில் 65 சதவீதம் அலுவலர்களின் சம்பளத்துக்கு செல்கிறது. இதர 35 சதவீதத்தை கொண்டே அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.வரி வசூல் செய்பவர்கள், அடுத்த அரையாண்டுக்கான வரியையும் முன்கூட்டியே செலுத்துங்கள் என மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநகராட்சியாகும் பட்சத்தில் இதற்கான செலவின தொகை மேலும் அதிகரிக்கும்.வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2013-ம் ஆண்டு நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள 55 சென்ட் இடத்தில் வணிக வளாகம் கட்ட ரூ.5 கோடிக்கு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. உரிய அழுத்தம் இல்லாததால், அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.தற்போது அந்த இடத்தில் நகராட்சி கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், நகராட்சிக்கு வர வேண்டிய வருமானம் பறி போயுள்ளது.திருஞானம், காரைக்குடி: நகராட்சி கட்டடத்தின் மேல் தளத்தில் 70 சதவீத இடம் காலியாக உள்ளது. இங்குள்ள துாசியை துடைக்க கூட ஆள் இல்லை. நகராட்சியை சுற்றி 30 சென்டுக்கும் மேல் காலியிடம் உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் தற்போதைய கட்டடம் போதுமானது.
காரைக்குடியில் ஏற்பட்டு வரும் நெருக்கடி காரணமாக, பஸ் ஸ்டாண்ட்டை கழனிவாசல் - ஓ.சிறுவயல் ரோட்டில் உள்ள பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இடம் மாற்றப்பட்டால், டவுண் பஸ்கள் வந்து செல்ல, ஒரு பிளாட்பாரம் போதுமானது. மீதி உள்ள இடத்தை அலுவலகம் கட்ட பயன்படுத்தி கொள்ளலாம்.நகராட்சிக்கு எதிரே உள்ள இடத்தில் இரண்டு தளம் அமைத்து, 100 கடைகள் கட்டலாம். இட மதிப்பின் அடிப்படையில் ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் வாடகை நிர்ணயம் செய்தால், மாதம் 10 லட்சம் வருமானம் வரும். இதன் மூலம் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்படும். அதை விடுத்து நகராட்சி அலுவலகம் கட்டினால், வருமானத்துக்கு பற்றாக்குறை ஏற்படும்.எனவே, காரைக்குடி எம்.எல்.ஏ., கே.ஆர்.ராமசாமி நகராட்சி இடத்தில் வணிக வளாக கட்டடம் கட்ட அரசிடம் பரிந்துரைக்க வேண்டும், என்றார்.

மூலக்கதை