இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்தல் 10 கிலோ தங்கம் பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்தல் 10 கிலோ தங்கம் பறிமுதல்

தூத்துக்குடி: இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கக் கட்டிகள் தூத்துக்குடியில் சிக்கின. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னைக்கு இந்த தங்க கட்டிகள் கொண்டு செல்லப்பட்டு ஹவாலா பணமாக மாற்றப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சென்னை ஹவாலா ஆசாமி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

குறிப்பாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதிகளில் இதுபோன்று தங்கக்கட்டிகள் கடத்தி செல்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இவை அனைத்தும் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரபல புள்ளி ஒருவர் மூலம் ஹவாலா பணமாக மாற்றப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சாயல்குடி பகுதி வழியாக தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி இயக்குநர் பாரிவள்ளல் தலைமையிலான வருவாய் புலனாய்வு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சாயல்குடி பகுதியில் நேற்றிரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 4 பைகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 4 பேரை பிடித்து சோதனையிட்டனர்.

அவர்கள் கொண்டு வந்திருந்த பைகளில் தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடமிருந்து தலா ஒரு கிலோ எடையுள்ள 10 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.



மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த தங்க கட்டிகள் அனைத்தும் இலங்கையிலிருந்து படகுகள் மூலம் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2. 80 கோடியாகும்.

இந்த தங்க கட்டிகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ஹவாலா பணமாக மாற்றப்பட உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கைதான 4 பேரிடமும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சென்னையில் ஹவாலா பணமாக மாற்றித் தரும் முக்கிய புள்ளி குறித்து சென்னை போலீசாரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல் அதிகரிப்பது ஏன்?

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உலக மார்க்கெட்டில் அதிகரித்து வருகிறது.

உலகிலேயே இந்தியா தான் தங்கத்தை பெருமளவில் கொள்முதல் செய்கிறது. இதனால் தங்கத்தை இந்தியாவுக்கு அனுப்புவதில் பல நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.

சட்டபூர்வமாக தங்கம் கொண்டு வந்தால் சுங்கவரி உள்ளிட்டவைகளால் அதிக லாபம் பார்க்க முடியாது எனக் கருதும் கடத்தல்பேர் வழிகள் கப்பல், விமானம் மூலம் கடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை