ஓபிஎஸ் அணியில் இருந்து விலகல் எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்எல்ஏ இணைந்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகல் எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்எல்ஏ இணைந்தார்

சேலம்: அதிமுக எம்எல்ஏக்கள் தற்போது எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டு அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு வருவார்கள் என்று கூறப்பட்டு வந்தது.

இதை நிரூபிக்கும் வகையில், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஓபிஎஸ் அணியில் இருந்து திடீரென விலகினார். ஓபிஎஸ் அணியில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும், கடந்த 5 மாதமாகியும் அதிமுகவின் இரண்டு அணிகளும் இணையாததால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆறுக்குட்டி எம்எல்ஏ, சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இன்று காலை வந்தார்.

அவருடன் அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஆறுக்குட்டி எம்எல்ஏ அவரது அணியில் இணைந்தார்.

ஆறுக்குட்டி எம்எல்ஏவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர், ஆறுக்குட்டி எம்எல்ஏ அளித்தபேட்டி: ஓ. பன்னீர்செல்வம் அணியில் இணைந்து பணியாற்றி வந்தேன். இரு அணிகளும் ஒன்று சேரும் என்று காத்திருந்தேன்.

கடந்த 29ம் தேதி கோவையில் ஓபிஎஸ் அணி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு என்னை அழைக்காமல் புறக்கணித்தனர்.

இது சம்பந்தமாக ஓ. பன்னீர்செல்வத்திடம் முறையிட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டம் நடந்தது.

அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம், எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்ததை நிறைவேற்றி தரும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரினேன். அதை அவர் நிறைவேற்றி தந்துள்ளார்.

இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் பாராட்டும் வகையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
ஓபிஎஸ் அணியில் என்னை தொடர்ந்து புறக்கணித்ததால், அங்கிருந்து விலக முடிவு செய்தேன்.

அதன் அடிப்படையில் இன்று எடப்பாடி அணியில் இணைந்துள்ளேன்.

அங்கு சூழ்நிலை சரியில்லாததால் இங்கு வந்துள்ளேன். கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு, டிரைவர் கனகராஜ் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றில் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பயந்து இங்கு வந்திருப்பதாகவும் கூறுவது உண்மையில்லை.

அந்த விசாரணையை சந்திக்க தயார். அதற்கும், இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். ஓபிஎஸ் அணியில் இருக்கும்போது, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறினேன்.

தற்போது சசிகலா, தினகரன் தலையீடு இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடக்கிறது. பொதுச்செயலாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு செய்தாலும், அதை ஏற்று கொள்வேன்.

இவ்வாறு ஆறுக்குட்டி எம்எல்ஏ கூறினார். ஆறுக்குட்டி எம்எல்ஏ, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார்.

ஓபிஎஸ் முதல்வர் பதவி விலகியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றபோது முதல்நபராக ஓபிஎஸ் அணிக்கு வந்தவர் ஆறுக்குட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை