ஈராக், ஆப்கானுக்கு பிறகு தீவிரவாதிகளின் குறி இந்தியா மீதுதான் அமெரிக்கா பகீர் ரிப்போர்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஈராக், ஆப்கானுக்கு பிறகு தீவிரவாதிகளின் குறி இந்தியா மீதுதான் அமெரிக்கா பகீர் ரிப்போர்ட்

புதுடெல்லி: ஈராக், ஆப்கானுக்கு பிறகு தீவிரவாதிகளின் குறி இந்தியாவை நோக்கித்தான் உள்ளது என அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 2016ம் ஆண்டு அதிகமான தீவிரவாத அச்சுறுத்தலை கொண்ட நாடு என்ற வகையில் பாகிஸ்தானையும் இந்தியா விஞ்சியுள்ளது. ஈராக், ஆப்கானுக்கு அடுத்த படியாக தீவிரவாதிகளின் குறி இந்தியா மீதுதான் உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு 11 ஆயிரத்து 72 தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. அதில் 927 தாக்குதல்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

இது கடந்த 2015ம் ஆண்டை விட 16 சதவீதம் அதிகமாகும். அப்போது 798 தாக்குதல்கள் நடைபெற்றன.



அதே போல் தீவிரவாத தாக்குதலில்களில் உயிரிழப்பும் 2015ம் ஆண்டு 289 பேரும், கடந்த ஆண்டு 337 பேரும் என 17 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 2015ல் 500 லிருந்து கடந்த ஆண்டு 636 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளன. 2015ல் 1010 தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில் கடந்த ஆண்டு அது 27 சதவீதம் குறைந்து 734 தாக்குதல்களாக சரிவடைந்துள்ளது.

அதே போல் மிகவும் அபாயகரமான தீவிரவாத இயக்கங்களில் ஐஎஸ், தலிபான்களுக்கு பிறகு நக்சலைட் இயக்கத்திற்கு அமெரிக்கா 3வது இடம் கொடுத்துள்ளது. போகோ ஹராம் கூட இந்த விவகாரத்தில் சற்று பின்தங்கிதான் உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மாவோயிஸ்ட் 336 தாக்குதல்களை நடத்தியதன் மூலம் 174 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 141 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களில் பாதிக்கும் அதிகமான தாக்குதல்கள் காஷ்மீர், சட்டீஸ்கர், மணிப்பூர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தான் நடக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தாக்குதல்களிலேயே மிகவும் பயங்கரமானது பீகாரில் சிஆர்பிஎப் மீது நக்சலைட்கள் நடத்திய தாக்குதல்தான். இதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் பெரும்பாலான தீவிரவாத தாக்குதல்கள் நக்சலைட்களால்தான் நடத்தப்படுகிறது என்றும் அமெரிக்கா அந்த அறிக்கையில் சுட்டி காட்டியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2015ம் ஆண்டு 12 ஆயிரத்து 121 தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஆனால் கடந்த ஆண்டு அது 9 சதவீதம் சரிவடைந்து 11 ஆயிரத்து 72 ஆக குறைந்துள்ளது. அதே போல உயிரிழப்புகளும் 2015ல் 29 ஆயிரத்து 424ல் இருந்து கடந்த ஆண்டு 13 சதவீதம் சரிவடைந்து 25 ஆயிரத்து 621 ஆக குறைந்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு 2015ல் 288 தீவிரவாத இயக்கங்கள் காரணமாக இருந்துள்ளன என்றால், கடந்த ஆண்டு அது 334 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 52 தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாக அதில் சுட்டி காட்டியுள்ளது.

.

மூலக்கதை