பீகார் மெகா கூட்டணியில் விரிசல் மேலும் அதிகரிப்பு தேஜஸ்வி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் ஏன்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகார் மெகா கூட்டணியில் விரிசல் மேலும் அதிகரிப்பு தேஜஸ்வி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் ஏன்?

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் தலைமையிலான ஜேடியூ-லாலுவின் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறத. கடந்த சட்டமன்ற தேர்தலில் இவை அமைத்த மெகா கூட்டணி பீகாரில் பாஜ தோல்விக்கு காரணமானது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக நிதிஷ், தனது பழைய கூட்டாளியான பாஜவுடன் நட்பு கரம் நீட்ட தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிதிஷ்-லாலு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. மேலும் லாலு குடும்பத்தினர் மீதான வருமான வரி, சிபிஐ, அமலாக்கத்துறையின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் காரணமாக நிதிஷ்குமாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

துணை முதல்வர் பதவியில் இருக்கும் லாலு மகன் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என ஜேடியூ தலைவர்கள் போர்க்கொடி உயர்த்த தொடங்கியுள்ளனர். இதனால் ஜேடியூ-ஆர்ஜேடி இடையே விரிசல் காணப்பட்டு வந்த நிலையில், இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் சோனியா ஈடுபட்டார்.

தற்போது ஜேடியூ தனது அஸ்திரத்தை காங்கிரசுக்கும் எதிராக திருப்பியுள்ளது.

இது கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஜேடியூ செய்தி தொடர்பாளர் அஜய்  அலோக் கூறுகையில், தேஜஸ்வி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன்? தங்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் போது மத சார்பின்மைக்கு ஆதரவாக பாசிச சக்திகளை எதிர்த்து காங்கிரசால் போராட முடியாது.

ஊழலை எதிர்த்து ஜேடியூவால் மட்டுமே குரல் எழுப்ப முடியும். தன் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தேஜஸ்வி இது வரை ஏன் மக்கள் மன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை.

அவ்வாறு அளித்திருந்தால் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவை போலியானவைதான் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார். நிதிஷ் குமார் கட்சியின் செய்தி தொடர்பாளரின் இந்த பேச்சு கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நிதிஷ், பாஜவுடன் தனது உறவை வலுப்படுத்துவார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

.

மூலக்கதை