சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உறுதியானால் சசிகலாவுக்கு கூடுதல் தண்டனைக்கு வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உறுதியானால் சசிகலாவுக்கு கூடுதல் தண்டனைக்கு வாய்ப்பு

சென்னை: உயர் அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்து, சிறையில் சொகுசாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு மேலும் பல ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்தார். பெங்களூர் சிறையில் டிஐஜியாக பணியாற்றிய ரூபா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, முத்திரைத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் தெல்கி ஆகியோர்  பெங்களூர் சிறையில் சொகுசாக இருப்பதாக கண்டுபிடித்தார்.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், அவரும், சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது போக்குவரத்து பிரிவு டிஐஜியாக உள்ள ரூபா, நமது நிருபரிடம் கூறியதாவது: சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நான் அறிக்கை கொடுத்திருக்கிறேன்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகள் அனைத்தும் உண்மைதான். சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்த புகார் எனக்கு வந்ததும் 4 முறை சிறைக்கு சோதனை நடத்த சென்றேன்.

ஒவ்வொரு முறை சோதனைக்கு செல்லும்போதும் கைதிகளை சில அதிகாரிகள் எச்சரிக்கை செய்து விடுகின்றனர். இதனால் நான் தவறுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த அறைகளில் எல்இடி டிவி, படுக்கை வசதிகள் இருந்தன.

அதோடு குக்கர், காபி மேக்கர், சூப் செய்ய தேவையான பொருட்கள் உட்பட வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன.

பிரியாணி செய்வதற்கான பொருட்கள் இருந்தன.

2வது அறையில் ஏராளமான சுடிதார், புடவைகள், நைட்டிகள் இருந்தன. ஜெயிலில், கைதிகளுக்கு கொடுக்கும் உடையை அவர் ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை என்பதை, நாங்கள் கொடுத்தபோது எப்படி மடித்து இருந்ததோ, அது அப்படியே நான் பார்க்கும்போதும் இருந்தது.

சசிகலாவுக்கு தேவையான மருத்து, மாத்திரைகள் அனைத்தும் வெளியில் இருந்துதான் வந்தன. ஆனால் கைதிகளுக்கு தேவையான மருந்துகளை சிறைக்குள்ளேயே வாங்க முடியும்.

தேவைப்பட்டால் மருத்துவர்கள் உதவியுடன் வெளியில் இருந்து சிறைத்துறையே வாங்கித் தரும். ஆனால் அவருக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் வெளியில் இருந்து வந்தன.

சசிகலா சிறையில் இல்லாமல், சிறைக்கு வெளியே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நான் விசாரித்தேன்.

அதை நேரடியாக கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தேன். ஆனால் என் கண்ணில் அவர் மாட்டவில்லை.

அப்படி அவர் வெளியில் சென்றதை நான் கண்டுபிடித்திருந்தால், நான் எடுக்கும் நடவடிக்கை பயங்கரமாக இருந்திருக்கும். சசிகலா சிறைக்குள் ஆப்பிள் ஐபோன் மற்றும் 2 சிம்கார்டு வைத்திருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

ஆனால் அவரிடம் சோதனை நடத்தி என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் அவர் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த பணிகள் நிற்கவில்லை.

தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிறையில் செல்போனை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் அவை பயன்படவில்லை. நான் கேட்டபோது எல்லாம் பழுதடைந்திருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன. சிறையில் தண்டனை குற்றவாளிகள் வேலை செய்ய வேண்டும்.

ஆனால் சசிகலா உட்பட யாரும் வேலை செய்யவில்லை. இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசாரால் டிடிவி தினகரனுடன் கைது செய்யப்பட்ட பெங்களூர் பிரகாஷ், சசிகலாவை சிறையில் சந்தித்துள்ளார்.

இது குறித்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர் எதற்காக சந்தித்தார்? என்பது தெரியவில்லை.

ஆனால் டெல்லி போலீசார் இது குறித்து பெங்களூர் சிறையில் விசாரணை நடத்தினர்.

சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை விதிகளை மீறியது மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் அவர் மேலும் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

நான் பாஜ தலைவர்களின் தூண்டுகோலுக்கு ஏற்ப செயல்படவில்லை. கடந்த பாஜ ஆட்சியின்போது முதல்வராக இருந்த எடியூரப்பாவின் பாதுகாப்பை நான்தான் குறைத்தேன்.

இரண்டு கட்சிகளும் எனக்கு ஒன்றுதான். என்னுடைய பணியில் நேர்மையாக நடப்பேன்.

இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்.

இவ்வாறு ரூபா கூறினார்.

.

மூலக்கதை