புதுகை, தஞ்சையில் ஆடியில் களைகட்டும் மொய் விருந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுகை, தஞ்சையில் ஆடியில் களைகட்டும் மொய் விருந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும்

ஆலங்குடி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி ஆகிய பகுதிகளில் மொய் விருந்து கலாசாரம் இருந்து வந்தது. தற்போது இது, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், சேந்தன்குடி, வடகாடு, மாங்காடு, அணவயல், கொத்தமங்கலம், குளமங்கலம், புள்ளான்விடுதி, நெடுவாசல், மேற்பனைக்காடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவியுள்ளது.

இந்தாண்டு ஆடி முதல் நாள்முதல் மொய் விருந்து விழாக்கள் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு மொய் விருந்துக்கும் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்கின்றனர்.

மொத்தமாக மொய் விருந்து வசூல் ரூ. 1000 கோடி அளவுக்கு நடைபெறும் என்று தெரிகிறது.

மொய்விருந்தை கலாசாரம் சார்ந்த விழாவாகவும், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான வழிமுறையாகவும் பொதுமக்கள் கருதுகின்றனர்.   ஆடி கடைசி நாள் வரைக்கும் தினம் ஒரு பகுதியில் மொய்விருந்து நடைபெறும். இதற்காக சிறப்பு அழைப்புகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி விருந்துக்கு அழைக்கின்றனர்.

வீதிக்கு வீதி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதில், மொய்விருந்து வைப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சிரித்தவாறு போஸ் கொடுப்பர்.

வரவேற்பு பேனர்களும் ஆங்காங்கே அதிக அளவில் வைத்திருப்பார்கள். வீட்டுக்கு வீடு மொய் நோட்டு பராமரிக்கின்றனர்.

அதில், யாரெல்லாம் நமக்கு மொய் செய்துள்ளார்கள், யாருக்கெல்லாம் நாம் மொய் செய்திருக்கிறோம் என்று எழுதி வைத்திருப்பர். திருமணம், காதுகுத்து போன்ற விழாக்களைப் போல இந்த விருந்து மண்டபத்தில் மட்டும் நடத்தப்படுவதில்லை.

பொதுவான ஒரு இடத்தில் பந்தல்போட்டு நடத்தப்படுகிறது. மொய் விருந்தால் அச்சகங்கள், பிளக்ஸ் போர்டுதாரர்களுக்கு கொண்டாட்டம்.

டாஸ்மாக்கிலும் வியாபாரம் களைகட்டுகிறது.

வங்கியே கடன் வழங்குது

உள்ளூரில் இருக்கும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் தங்கள் வங்கியை வளர்ச்சிக்கு எடுத்துசெல்லும் வகையில் தங்கள் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள்.

மொய் விருந்து வைப்பவர்கள் மொய் விருந்து முடிந்த பிறகு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி முதலீடு செய்ய ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் வங்கியிலிருந்து பணம் எண்ணும் மெஷினையும் அங்கு கொண்டு செல்வதோடு, வங்கி பணியாளரையும் அங்கு அனுப்பி விடுவார்கள்.

மொய் விருந்து மூலம் கிடைக்கும் பெரிய தொகையை விவசாய இடம் வாங்குதல், புதிய வியாபாரம் தொடங்குதல், தாங்கள் செய்து வரும் வியாபாரத்தில் முதலீடு செய்தல், காலத்திற்கு ஏற்றார்போல் வருமானம் தரக்கூடிய தொழில்களில் முதலீடு செய்வார்கள்.

.

மூலக்கதை