வெற்றிபெற்ற ராம் நாத் கோவிந்த் ஜனாதிபதியாக 25ல் பதவி ஏற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெற்றிபெற்ற ராம் நாத் கோவிந்த் ஜனாதிபதியாக 25ல் பதவி ஏற்பு

புதுடெல்லி : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி பதவிக்கு கடந்த 17ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் வெளியாகின.

பாஜ சார்பில் ராம் நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைமையிலான 18 எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமார் போட்டியிட்டனர். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது.

771 எம். பி. க்கள், 4,109 எம். எல். ஏ. க்கள் இந்த தேர்தலில் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவாகின.

11 மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 768 எம். பிக்களும், 4,083 எம். எல். ஏ. க்களும் வாக்களித்தனர்.

வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

ஆரம்பம் முதலே ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருந்தார். இறுதியாக, மாலையில் தேர்தல் முடிவு வெளியானது.

அதில், ராம்நாத் கோவிந்த் மொத்தம் 2,930 ஓட்டுகள் பெற்றிருந்தார்.   இவற்றின் மதிப்பு 7 லட்சத்து 2,044. இவர் 65. 65 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.

மீரா குமார் மொத்தம் 1,844 ஓட்டுகள் பெற்றார். இவற்றின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314.

வாக்கு சதவீதம் 34. 35. பதிவான ஓட்டுகளில் 77 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நாட்டின் 14வது ஜனாதிபதியாக அவர் வரும் 25ம் தேதி பொறுப்பேற்கிறார்.

பிரதமர் மோடி வாழ்த்து

வெற்றி பெற்ற ராம் நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி டுவிட்டரிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்தார்.

ஜனாதிபதி பிரணாப், எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாஜ தலைவர் அமித்ஷா ஆகியோரும் ராம் நாத் கோவிந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். வருகிற 25ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் ஹேகர், ராம் நாத் கோவிந்துக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

.

மூலக்கதை