பல கோடி வரி ஏய்ப்பு புகார் எதிரொலி : போலீஸ் ஐஜி மகன் வீட்டில் ஐடி ரெய்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல கோடி வரி ஏய்ப்பு புகார் எதிரொலி : போலீஸ் ஐஜி மகன் வீட்டில் ஐடி ரெய்டு

சென்னை : பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து முன்னாள் போலீஸ் ஐஜி அருளின் மகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

சென்னை அசோக்நகர் 15வது செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் நெடுஞ்சாலைத்துறையில் தலைமை செயல் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மகன் தியாகராஜன். இவர், தமிழக நெடுஞ்சாலைத்துறையில் முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்று செயல்படுத்தி வருகிறார்.

இவர் பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையில் 32 கிலோ தங்கம், 41 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அங்கு எழும்பூர் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகை எதிரே உள்ள ஒரு வீட்டை ரூ. 10கோடிக்கு விலைக்கு வாங்கியது தெரியவந்தது.

அந்த வீடு முன்னாள் போலீஸ் ஐஜி அருளின் மகன் மைக்கேல் அருளுக்குச் சொந்தமானது. அந்த வீடு சுமார் ரூ. 60 கோடி வரை விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் நிலமதிப்பின்படி அந்த வீடு சுமார் ரூ. 26 கோடிக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் ரூ. 10 கோடிக்கு வாங்கியதாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் வரி ஏய்ப்பும் நடந்துள்ளது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அந்த வீட்டை விற்பனை செய்த மைக்கேல் அருள், தற்போது போட்கிளப்பில் 3வது அவென்யூவில் வசித்து வருகிறார்.

அவரது வீட்டில் இன்று காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் நிலம் விற்பனை செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.



வரி ஏய்ப்பு குறித்தும் சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிபி பதவி உருவாக்குவதற்கு முன்பு, போலீஸ் ஐஜி பதவிதான் உச்சப்பட்ச பதவியாக இருந்தது. முதல் ஐஜியாக இருந்தவர் அருள்தான்.

அவர் நேர்மையாகவும், சிறப்பாகவும் பணியாற்றியவர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அவரைத் தெரியாமல் இருக்க முடியாது.

அவரது மகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தியாகராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், கான்ட்ராக்ட் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை