அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீருக்காக குடங்களுடன் அல்லாடும் அப்பாவி மக்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீருக்காக குடங்களுடன் அல்லாடும் அப்பாவி மக்கள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் மண்டலத்தில் அம்பத்தூர், கொரட்டூர், பாடி, முகப்பேர், மண்ணூர்பேட்டை, அத்திப்பட்டு, மங்களபுரம், பட்டரைவாக்கம், கள்ளிக்குப்பம், புதூர், மேனாம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்பத்தூர் நகராட்சியாக இருந்தபோது, இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ், கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் ரூ. 267 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்துக்காக முக்கிய சாலைகள் மற்றும் குறுக்கு சாலைகளில் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு, அங்கு ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதையடுத்து வீடுகளுக்கு புதிய குழாய் இணைப்பு வழங்க வாய்ப்பு உருவானது.

மேலும், இத்திட்டத்துக்காக அம்பத்தூர் மண்டலத்தில் கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 22 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் பகுதி இணைக்கப்பட்டது. பின்னர் 2012-ல் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் திட்டப் பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார். பின்னர், அம்பத்தூர் மண்டலத்தில் ஒருசில இடங்களுக்கு மட்டும் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன.

மற்ற பகுதிகளில் தெருக்குழாய் மற்றும் லாரிகள் மூலம் வாரத்துக்கு 2 முறை குறைந்த அளவில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மற்றவர்கள் ஒரு குடம் தண்ணீருக்காக காலி குடங்களுடன் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அல்லாடி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக நல ஆர்வலர்கள் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளாக அம்பத்தூர் பகுதி குடிநீருக்காக அல்லாடி வருகிறது.

சென்னை மாநகராட்சி மண்டலமாக மாறிய பிறகும், புதிய குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகின்றனர். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், அம்பத்தூர் நகராட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ. 267 கோடி குடிநீர் திட்டம் தற்போது முற்றிலும் முடங்கிவிட்டது.

புழல் ஏரியை சுற்றி புதிய போர்வெல் போட்டு நீரை பெற்று, அம்பத்தூர் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினால் மட்டும்தான் அம்பத்தூர் மக்கள் குடிநீருக்காக அல்லல்படும் பிரச்னை தீரும்’ என்றனர். இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கிய புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் போதிய நீராதாரம் இன்றி வறண்டு கிடக்கிறது.

வரும் மழைக்காலங்களில் போதிய மழை பெய்தால் மட்டுமே, அம்பத்தூரில் புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வரும். அதுவரை இதே நிலைதான் நீடிக்கும்’ என்கின்றனர்.

இதேபோல் அம்பத்தூர் மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி சாக்கடை, சாலையோர கட்டிட கழிவுகள், சேதமடைந்த மழைநீர் கால்வாய்கள், சீரற்ற மின் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

எனினும், சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் எந்த பிரச்னைகளுக்கும் செவிசாய்க்காமல், அனைத்து பிரச்னைகளுக்கும் ‘இன்று போய் நாளை வா’ என மக்களை தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர்.

மண்டல அதிகாரிகளின் தொடர் ஆலோசனை கூட்டங்களில் எந்த பிரச்னைகளுக்கும் தீர்வு காணாமல், வெறுமனே கதை அளந்துவிட்டு, அரசு செலவில் டீ, சமோசா சாப்பிட்டு காலம் கடத்தி வருகின்றனர் என்று பொதுமக்களிடம் குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
அம்பத்தூர் மண்டலத்தில் நிலவி வரும் குடிநீர் மற்றும் மின் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் என்றுதான் அதிகாரிகள் தீர்வு காணப்போகிறார்கள்? காலம் பதில் சொல்லும். .  

.

மூலக்கதை