கொடுங்கையூர் தீ விபத்து : பேக்கரி கடை உரிமையாளரும் உயிரிழந்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொடுங்கையூர் தீ விபத்து : பேக்கரி கடை உரிமையாளரும் உயிரிழந்தார்

சென்னை : கொடுங்கையூரில் நடந்த தீ விபத்தில் பேக்கரி உரிமையாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் ஆனந்த்(35) என்பவர் பேக்கரி கடை நடத்தி வந்தார். இங்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்க சென்ற வீரர்கள் கடையின் ஷெட்டரை திறந்தபோது எதிர்பாராதவிதமாக உள்ளே இருந்த சிலிண்டர்கள் வெடித்ததில் வீரர்கள் மற்றும் வேடிக்கை பார்த்த பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டனர். தீ விபத்தை செல்பி எடுத்த பலரும் படுகாயம் அடைந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் ஸ்டான்லி மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு வீரர் ஏகராஜ் சிகிச்சை பலனின்றி அன்று அதிகாலையே உயிரிழந்தார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமானந்தன் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.

இதைதொடர்ந்து, கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரை சேர்ந்த அபிமன்யூ என்பவரும் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேக்கரி கடை உரிமையாளர் ஆனந்த்(28) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த ஆனந்த் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் புதிதாக பேக்கரி கடை தொடங்கினார்.

கடை திறந்த ஒரே மாதத்தில் தீ விபத்தில் சிக்கி ஆனந்த் பலியான சம்பவம் சோகம் ஏற்படுத்தியுள்ளது.

கட்டிட உரிமையாளரான கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த காந்தி மற்றும் கடையை பராமரித்து வந்த அவரது சகோதரர் நித்யானந்தம் ஆகியோர் தலைமறைவாகவே உள்ளனர்.

கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டுள்ளதா என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுசெய்து வரும் நிலையில் அதன் உரிமையாளர்கள் தலைமறைவாக இருப்பதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை