எம்பிக்களுக்கு தடை எதிரொலி பயணிகள் பயணம் செய்வதை விமான நிறுவனங்கள் தடுக்க முடியாது

தமிழ் முரசு  தமிழ் முரசு
எம்பிக்களுக்கு தடை எதிரொலி பயணிகள் பயணம் செய்வதை விமான நிறுவனங்கள் தடுக்க முடியாது

புதுடெல்லி : விமானத்தில் பயணிகள் பயணம் செய்வதை விமான நிறுவனங்கள் தடுக்க முடியாது என ராஜ்யசபா துணை தலைவர் பி. ஜே. குரியன் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரவீந்திர கெய்க்வாட், விமானத்தில் ஏற்பட்ட இருக்கை ஒதுக்கீடு தகராறு காரணமாக மேலாளர் ஒருவரை செருப்பால் அடித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் விமானத்தில் பயணம் செய்ய விமான நிறுவனங்கள் தடை விதித்தன. பின்னர் அவர் மன்னிப்பு கேட்ட பிறகு தடை தளர்த்திக் கொள்ளப்பட்டது.

அதே போல் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு தேச எம்பி திவாகர் ரெட்டி விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவருக்கும் விமான நிறுவனங்கள் பயணம் செய்வதற்கு தடை விதித்தன. பின்னர் இது வாபஸ் பெறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து சமாஜ்வாடி எம்பி நரேஷ் அகர்வால் கேள்வி எழுப்பினார்.

இதில் எம்பிக்களை ரவுடிகளை போல சமூக வலைத்தளங்கள் சித்தரிக்கின்றன. எம்பிக்கள் பயணத்தை தடுக்க விமான நிறுவனங்களுக்கு அ திகாரம் உள்ளதா? இது குறித்து உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து ராஜ்யசபா துணை தலைவர் பி. ஜே. குரியன் பேசுகையில், எம்பியின் கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

யாருக்கும் தண்டனை வழங்குவதற்கு விமான நிறுவனங்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. எனவே இது குறித்து மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எம்பிக்களும் இந்நாட்டின் குடிமக்கள்தான்.

அவர்கள் தப்பு செய்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து அதன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர,விமான நிறுவனங்கள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க கூடாது என்றார்.

குற்றம் என்ற வார்த்தைக்கு பதிலாக விதிமீறல் என்று கூறலாம் என காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா பரிந்துரைத்தார்.

ஆனால் இதை மறுத்த குரியன், ஒருவரை யார் தாக்கினாலும், அடித்தாலும் அது குற்றம் தான் என்று விளக்கம் அளித்தார்.

.

மூலக்கதை