விவசாயிகள் பிரச்னையில் ராகுல் நாடகமாடுகிறார் : மத்திய அமைச்சர் உமாபாரதி தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயிகள் பிரச்னையில் ராகுல் நாடகமாடுகிறார் : மத்திய அமைச்சர் உமாபாரதி தாக்கு

புதுடெல்லி : விவசாயிகள் பிரச்னையில் ராகுல் நாடகமாடுகிறார் என மத்திய அமைச்சர் உமா பாரதி தாக்கியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடங்கிய நாள் முதல் விவசாயிகள் பிரச்னை, பசு பாதுகாப்பு கும்பல் அட்டூழியம் என அடுத்தடுத்து பிரச்னைகளை கிளப்பி எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். இந்த சூழலில் விவசாயிகள் பிரச்னை குறித்து தொடர்ந்து ராகுல் கவனம் செலுத்தி வருகிறார்.

ராஜஸ்தானில் கடந்த சில மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ராகுல் விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டன என்று குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த சூழலில் விவசாயிகள் பிரச்னையில் ராகுல் நாடகமாடுகிறார் என மத்திய அமைச்சர் உமா பாரதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது உத்தரபிரதேசத்தில் உள்ள பந்தல்காண்ட் பகுதியில் கென் பெத்வா நதி நீர் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு தடுத்தனர். இந்த திட்டத்தை கிடப்பில் போட்டதே கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான்.

ஆனால் இதில் பிரதமர் மோடி அக்கறை எடுத்து திட்டத்தை முடிக்க விரைவு படுத்தி வருகிறார். ஆனால் விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதாக கூறிக் கொள்ளும் ராகுல், ஏன் கென் பெத்வா நதி நீர் திட்டத்தை பற்றி பேச மறுக்கிறார்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம்,  உள்ளிட்ட மக்கள் பயன்பெறுவர் என்றார்.

.

மூலக்கதை