கட்டுமான தொழிலாளர்களுக்காக குஜராத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கட்டுமான தொழிலாளர்களுக்காக குஜராத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு

அகமதாபாத் : கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், குஜராத்தில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கட்டுமான தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு குறைந்த விலையில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்தது. இத்திட்டத்துக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ், கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதிகளில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. சாப்பாடு, ரொட்டி, பருப்பு, காய்கறிகள் ஆகியவை மதிய உணவில் இடம்பெற்றுள்ளன.

குறைந்த விலையில் மதிய உணவு கிடைப்பதால் கட்டுமான தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பாதிக்கும் பணத்தில் உணவுக்கு அதிகளவில் செலவிட்டு வந்த நிலையில், தற்போது செலவு மிச்சமாகி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ரூ. 10க்கு வழங்கப்படும் மதிய உணவை வாங்க கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள் தங்களது பெயரை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.

மதிய உணவு மையங்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை இயங்கும். இதுகுறித்து, முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், ‘‘நாடு முழுவதும் முதல்கட்டமாக தற்போது 84 இடங்களில் இந்த மதிய உணவு மையங்கள் இயங்கும்.

இத்திட்டதில், சுமார் 25  ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது’’ என்றார்.


.

மூலக்கதை