அரசின் நிதி பற்றாக்குறையால் பள்ளியில் மதிய உணவு அளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசின் நிதி பற்றாக்குறையால் பள்ளியில் மதிய உணவு அளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறல்

திருவள்ளூர் : நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, கல்வித்துறை ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வியை வழங்க ஆர்வம் காட்டும் நிலையில், அரசு துவக்க, நடுநிலை பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது.

இதனால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது.

அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே மதிய உணவும் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப சத்துணவுக்கான நிதி ஒதுக்கீடே தற்போதும் வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், கூடுதலாக தேவைப்படும் மதிய உணவுக்கான செலவினங்களை தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே ஏற்கின்றனர்.

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மற்றும் பிற மளிகை பொருட்களை வாங்கி வந்து, மாணவர்களின் மதிய உணவு தேவையை பூர்த்தி செய்கின்றனர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘மாணவர்களுக்கான மதிய உணவு நிதியை, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் அரசு ஒதுக்கீடு செய்கிறது.

இடைப்பட்ட 4 மாதங்களுக்கு தேவைப்படும் சத்துணவுக்கான செலவினங்களை நாங்களே ஏற்கிறோம். மதிய உணவு என்பது மிக முக்கியம்.

எனவே, அதற்கான நிதி ஒதுக்கீடை, பள்ளிகள் திறக்கும் சமயத்திலேயே வழங்க, கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறுகையில், ‘’ மதிய உணவுக்கான நிதியை சரியான சமயத்தில் அரசு வழங்கினால், எங்களின் சுமை குறையும்’ என்றனர்.

மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், ‘சத்துணவுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த கணக்கீடை, மாவட்ட நிர்வாகத்தின் சத்துணவு பிரிவு கணக்கிட்டு, ஒதுக்கீடை பெற்று கொடுக்கும். விரைவில் அதற்கான பணி துவங்கும்.

அடுத்த மாத துவக்கத்தில் சத்துணவுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

முட்டை இல்லை

கடந்தாண்டு எண்ணிக்கையின் அடிப்படையிலேயே முட்டைகள் வழங்குவதால் புதிய மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை. முட்டையை பகிர்ந்து கொடுத்தும் பெரும்பாலான மாணவர்களுக்கு கிடைப்பது இல்லை.

செப்டம்பரில் அரசு நிதி ஒதுக்கிய பிறகாவது புதிய மாணவர்களுக்கு முட்டை கிடைக்குமா என்று தெரியவில்லை.

.

மூலக்கதை