பெங்களூர் விரைந்தார் டிடிவி.தினகரன் : சசிகலாவுடன் இன்று பிற்பகல் சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூர் விரைந்தார் டிடிவி.தினகரன் : சசிகலாவுடன் இன்று பிற்பகல் சந்திப்பு

சென்னை : பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தர ரூ. 2கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் சிறப்பு சலுகைகள் பெற்றது தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை அம்மாநில முதல்வர் அமைத்துள்ளார்.

இந்த விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த சிறைத்துறை டிஜஜியாக இருந்த ரூபா தற்போது வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 இதையும் கர்நாடகத்தில் உள்ள எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த விவகாரத்தால் சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



மேலும் அவரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் அமைச்சர்களுக்கு இடையோன மோதல் விவகாரம் வெடித்துள்ளது.

அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அரசின் இணையதளத்துக்கு அனுப்புங்கள் என்று நேரடியாக கமல் களம் இறங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் கண்ணியத்துடன் பதிலளிக்கவில்லை என்று டிடிவி.

தினகரன் கூறியதால் அதிமுக அம்மா அணியில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படி பல குழப்பங்கள் அதிமுக அரசியலில் இருந்து வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில், சசிகலா மற்றும் டிடிவி. தினகரனை ஒதுக்கி வைத்தது வைத்தது தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டர்கள் வெளிப்படையாக பேட்டி அளித்து வருகின்றனர்.

இப்படி அதிமுகவில் மோதல் முற்றிவரும் சூழ்நிலையில், டிடிவி. தினகரன் இன்று பிற்பகலில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை  சந்தித்து பேச உள்ளார்.

இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் விரைந்துள்ளார். இந்த சந்திப்பில், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து சசிகலாவுடன், டிடிவி. தினகரன் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

மேலும் அதிமுகவில் அம்மா அணியில் நிலவி வரும் குழப்பங்கள் குறித்தும், அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சசிகலாவிடம் கருத்துகளை கேட்க உள்ளதாக அதிமுக அம்மா அணியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

.

மூலக்கதை