ஆவடி, திருமுல்லைவாயலில் ரயில்வே கேட் மூடல் : உயிரிழப்பு அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆவடி, திருமுல்லைவாயலில் ரயில்வே கேட் மூடல் : உயிரிழப்பு அதிகரிப்பு

ஆவடி நகராட்சி பகுதிகளில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்திய விமானப் படை, ஆவடி கனரக தொழிற்சாலை, மத்திய வாகன கிடங்கு உள்ளிட்ட பல்வேறு ராணுவத் துறை நிறுவனங்களும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ரயில்வே தொழிற்சாலை மற்றும் தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. மேலும், இங்கு ஏராளமான தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளும் இயங்குகின்றன.

மேலும், ஆவடி நகராட்சி பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலைக்கு சென்று வரும் வகையில், ஆவடி சிடிஎச் சாலை-பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் நேரு பஜார் அமைந்துள்ளது.

இந்த நேரு பஜாரை ஒட்டி ஆவடி ரயில்நிலைய கேட் உள்ளது. இந்த கேட்டை கடந்துதான் அனைவரும் தத்தமது வாகனங்களில் செல்ல முடியும்.

ஆவடி ரயில் நிலையத்தில் நான்கு வழித்தடங்கள் உள்ளன.

இந்த வழித்தடத்தில் நாளொன்றுக்கு 400-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ், கூட்ஸ் மற்றும் மின்சார ரயில்கள் சராசரியாக 5 நிமிடங்களுக்கு ஒருமுறை சென்று வருகின்றன. இதனால் இந்த ரயில்வே கேட் எந்நேரமும் மூடியே கிடக்கும்.

இதனால் மாநகர பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சுமார் 2 கிமீ தூரம் கடந்த பல ஆண்டுகளாக சுற்றியபடி வந்து செல்கின்றன. ஆனால், அவ்வாறு சுற்றி வருவதற்கு தாமதமாகும் என்பதால், பூட்டிக் கிடக்கும் ரயில்வே கேட்டுக்குள் இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் உயிருக்கு துணிந்து, ரயில் வரும் நேரங்களிலேயே ரயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர்.

இதில் பலர் ரயில்களில் அடிபட்டு பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மாற்று திறனாளிகளாகவும் மாறிவிட்டனர்.
எனவே, மூடியிருக்கும் ஆவடி ரயில்வே கேட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, அங்கு வாகனங்கள் வந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களும் ரயில் பயணிகளும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அம்மனுக்களின்மீது தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், விபத்தின் மூலம் மக்கள்தொகையைக் குறைக்கும் வகையில் காலம் தாழ்த்தி வருகின்றனர் என ஆவடி பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோல், ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் ₹20 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ‘நம்ம டாய்லெட்’ மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் வீணாகி வருகிறது. முன்னதாக, தமிழக அரசின் தொலைநோக்கு திட்டத்தின்கீழ், ‘நம்ம டாய்லெட்’ திட்டம் உருவாக்கப்பட்டது.

இதேபோல், ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டான திருமுல்லைவாயல், நாகம்மை நகரில் கடந்த ஓராண்டுக்கு முன் நவீன தொழில்நுட்பத்துடன் சுமார் ₹20 லட்சம் மதிப்பில் பச்சை நிறத்தில் ‘நம்ம டாய்லெட்’ கட்டி முடித்தும், இன்றுவரை அந்த டாய்லெட்டுகள் மூடியே கிடப்பதால் வீணாகி வருகிறது. திறக்கப்படாத ‘நம்ம டாய்லெட்’டுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலர் சிறுநீர் கழிப்பது உட்பட பல்வேறு அசுத்தங்களை செய்து வருகின்றனர்.

இதையடுத்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் பரவி வருகின்றன.

ஆவடி நகராட்சி பகுதிகளில் வீணாகி வரும் ‘நம்ம டாய்லெட்’டை உடனடியாக திறக்க நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும், செவிடன் காதில் ஊதிய சங்கு போல் மெத்தனமாக உள்ளனர். நகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் அனைத்தும் மர்மம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

ஏற்கெனவே கட்டிய நம்ம டாய்லெட்டை கடந்த ஓராண்டுக்கும் மேலாக திறக்காத நகராட்சி அதிகாரிகள், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தை எப்படி வழிநடத்துவார்கள்?

.

மூலக்கதை