ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை 24 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் நேற்றுடன் முடிந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை 24 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் நேற்றுடன் முடிந்தது

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தொடங்கி ஜூலை 19ம் தேதியுடன் (நேற்று) முடிந்தது. மொத்தம் 24 நாட்கள் நடைபெற்ற பேரவை கூட்டத்தில் ஆக்ரோஷம் மற்றும் ஆரோக்கியமான முறையில் விவாதங்கள் நடைபெற்று முடிந்ததாக எம்எல்ஏக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தொடங்கி, ஜூலை மாதம் 19ம் தேதி (நேற்று) வரை நடைபெற்றது. இந்த நாட்களில் விடுமுறை நாட்கள் தவிர மொத்தம் 24 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

அதன்படி, ஜூன் 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய முதல் நாள், எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், “கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது ஆளும் கட்சிக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளிக்க ரூ. 6 கோடி முதல் ரூ. 10 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசிய ரகசிய வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது” குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால், சபாநாயகர் தனபால் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

இதனால் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டதும், எம்எல்ஏக்கள் விற்பனைக்கு என்று எழுதிய வாசகத்தையும் தூக்கி காட்டினர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

அன்றைய தினம் எதிர்க்கட்சிகள் யாரும் இல்லாமல் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற ஒவ்வொரு நாள் சட்டப்பேரவை கூட்டத்தில், கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு முக்கிய பிரச்னைகள் குறித்து பேசி அவையின் கவனத்தை ஈர்த்தார்.

அதன்படி, குடிநீர் பிரச்னை, நெடுவாசலில் 100 நாளாக நடைபெற்று வரும் போராட்டம், கதிராமங்கலம் பிரச்னை, நீட் தேர்வு பிரச்னை, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக வெளியான தகவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஆதாரத்துடன் எடுத்து வைத்தார்.

இந்த பிரச்னைகள் மீது சட்டப்பேரவையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றது. சில பிரச்னைகளில் சபாநாயகர் பேச அனுமதி அளிக்காதபோது, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வெளிநடப்பு செய்து விட்டு சிறிது நேரத்தில் மீண்டும் அவைக்கு வந்து அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.

மேலும், பல்வேறு மானிய கோரிக்கைகள் மீது எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பேசும்போது சில கருத்துக்கள் சொல்லும்போது, அதற்கு எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பேச்சுக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கும் சம்பமும் அதிகளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் ஓபிஎஸ் அணியினர் பெரிய அளவில் தங்கள் எதிர்ப்பை ஆளுங்கட்சிக்கு எதிராக காட்டவில்லை.



சட்டப்பேரவை கூட்டத்தின் கடைசி நாளான நேற்று, மு. க. ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருளான குட்கா தாராளமாக தமிழகத்தில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என்று கூறி அவரும், திமுக எம்எல்ஏக்கள் சிலரும் குட்கா பாக்கெட்டுகளை அவையில் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்னையை அவை உரிமை குழுவுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் தனபால் கூறினார்.

இதையடுத்து சட்டப்பேரவை கூட்டம் நேற்று மாலையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மொத்தத்தில், 24 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் ஆக்ரோஷமாகவும், ஆரோக்கியமாகவும் நடைபெற்றதாக அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

.

மூலக்கதை