எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு : அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு : அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

மீனம்பாக்கம் : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6. 15 மணியளவில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் புதுடெல்லிக்கு விமானத்தில் கிளம்பி சென்றார். அதற்கு முன் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: தமிழக மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, நீட் தேர்வினால் கல்வி உரிமை பாதிக்கக்கூடாது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஏற்கெனவே அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்காக தமிழக அமைச்சர்களான நாங்கள் புதுடெல்லி செல்கிறோம். நடிகர் கமலஹாசன் ஏக் துஜே கேலியே என்ற இந்தி படத்தில் நடித்து, இந்தியின் புகழை பரப்பியவர்.

அப்படிப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்ட வீரர் கமலுக்கு என் வாழ்த்துக்கள். அவர் அரசியலுக்கு வந்தார் என ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறார்.

தமிழகத்தில் ஜீவாதார பிரச்னைகள் எவ்வளவோ உள்ளது.

முல்லை பெரியாறு அணை, காவிரி நதிநீர், கச்சத்தீவு, இலங்கை தமிழர் பிரச்னை என எந்த பிரச்னைக்கு அவர் குரல் கொடுத்தார் என தெரியவில்லை. இவர், தமிழகத்தின் எந்த பிரச்னைக்கு குரல் கொடுக்கவும் இல்லை.

அதைப் பற்றி கண்டுகொள்ளவும் இல்லை. அவர் ஊதுகோலாக இருந்து அரசுக்கு எதிராக செயல்படுகிறார்.

எந்தவொரு ஊழலுக்கும் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியதுதானே? நீங்கள் ஆதாரம் இருந்தால் அரசுக்கு அனுப்பி வையுங்கள் என தனது ரசிகர்களை தூண்டிவிடுகிறார். அவர் அமைச்சர்களை கல்லுளிமங்கன் என கூறியிருப்பது கண்ணியமற்ற செயல்.

திரைப்படத் துறையில் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். ஆனால், இவர் மட்டும்தான் தைரியசாலி, வல்லவர் என மார்தட்டி கொள்கிறார்.

தமிழக அமைச்சர்களின் ஊழலுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது எனக் கூறிய அவர், தற்போது மக்களிடம் நீங்கள் ஆதாரம் இருந்தால் அனுப்புங்கள் எனக் கூறுவது எவ்வளவு முரண்பாடான செயல். ஏமாற்றுவேலை.

தமிழக அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால், அவர்களை தமிழக மக்கள் அங்கீகரிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.

அக்கருத்துக்கு நாங்கள் பதில் கருத்து கூறலாம். ஊழல் தொடர்பான ஆதாரம் இருந்தால் வழக்கு தொடரட்டும்.

அதற்கு கமல் தயாரா? ஆதாரம் இல்லாமல் பொய்யான, தவறான குற்றச்சாட்டுகளை கமல் கூறிக்கொண்டிருப்பதை நாங்கள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கள் பொறுமையை அவர் பலவீனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

பொறுமைக்கும் எல்லை உண்டு.

.

மூலக்கதை