ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது : பாஜ வேட்பாளர் ராம்நாத் முன்னிலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது : பாஜ வேட்பாளர் ராம்நாத் முன்னிலை

புதுடெல்லி : ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி,  நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அதிக ஓட்டுக்களை பெற்று வந்தார்.

இதனால் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 சுற்று வாக்குகள் எண்ணிக்கை முடிந்த பின் மாலை 5 மணியளவில் முடிவு அறிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின்  பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாட்டின் 14வது  ஜனாதிபதியை தேர்வு  செய்வதற்கான தேர்தலை, தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.

அனைத்து தரப்பினருக்கும் பொதுவானவரை வேட்பாளராக அறிவித்தால், அவருக்கு ஆதரவு தருவதாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இந்நிலையில், பீகார் மாநில கவர்னராக பணியாற்றி வந்த ராம்நாத் கோவிந்தை, ஜனாதிபதி வேட்பாளராக பாஜ அறிவித்தது. ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும், ஆர்எஸ்எஸ் பின்னணி உடையவர் என்பதால் அவரை ஆதரிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

இந்நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தார். இது எதிர்க்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ராம்நாத் கோவிந்துக்கு போட்டி கொடுக்கும் வகையில், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரை எதிர்க்கட்சிகள் அறிவித்தன. இவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.   ராம்நாத் கோவிந்த், மீராகுமார் ஆகியோர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.

ஜனாதிபதி தேர்தலில் 776  எம்பிக்கள், 4,120 எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி  பெற்றிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் சட்டபேரவை என 32 வாக்கு மையங்களில் கடந்த 17ம் தேதியன்று வாக்குப்பதிவு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. 11 மாநிலங்களில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.   வாக்கு பதிவு முடிந்ததும், பிற  மாநிலங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று  காலை 11 மணியளவில்  தொடங்கியது. நாடாளுமன்ற வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் முதலில்  எண்ணப்பட்டன.

அதில், காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரை விட பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அதிக ஓட்டுக்களை பெற்றிருந்தார்.

இதையடுத்து, மற்ற மாநிலங்களில் இருந்து  கொண்டு வரப்பட்ட ஓட்டு  பெட்டிகள் ஆங்கில எழுத்துக்களின் வரிசை அடிப்படையில் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை 4 மேஜைகளில் நடந்தது.

ஒவ்வொரு மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அறிவிக்கப்பட்டது. மாநில வாரியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையிலும் பாஜ வேட்பாளரே அதிக ஓட்டுக்களை பெற்று வந்தார்.

மொத்தம் 8 சுற்று வாக்கு  எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர், இன்று மாலை 5 மணியளவில் முடிவுகள்  அறிவிக்கப்படுகிறது. அதில் பாஜ வேட்பாளரே அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் இருப்பதால், அவரே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வெற்றிபெறும் வேட்பாளர் ஜூலை 25ம் தேதி பதவியேற்பார்.

.

மூலக்கதை