மாயாவதி ராஜினாமா அரசியல் நாடகம் பாஜ தாக்கு பீகாரில் போட்டியிட்டால் வெற்றி பெற உதவுகிறோம்: லாலு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாயாவதி ராஜினாமா அரசியல் நாடகம் பாஜ தாக்கு பீகாரில் போட்டியிட்டால் வெற்றி பெற உதவுகிறோம்: லாலு

புதுடெல்லி : மாயாவதி ராஜினாமா செய்ததையடுத்து பீகாரில் நின்று வெற்றி பெறுங்கள் என லாலு ஆதரவு கரம் நீட்டியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று ராஜ்யசபாவில் விவாதத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் குறித்து பேச மாயாவதி அனுமதி கோரினார். அவருக்கு அவை துணை தலைவர் குரியன் 3 நிமிடம் ஒதுக்கினார்.

அதை தாண்டியும் மாயாவதி பேசவே, குரியன் குறுக்கிட்டார். இதனால் ஆவேசமடைந்த மாயாவதி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் குறித்து பேச என்னை அனுமதிக்கவில்லை என்றால் நான் உறுப்பினராக இருப்பதில் அர்த்தம் இல்லை என்றார்.

இதுகுறித்து பேச வேண்டும் என்றால் அவை விதிகளின்படி முன் கூட்டியே ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என குரியன் தெரிவித்தார். இதனால் ஆவேசம் அடைந்த மாயாவதி நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

அவருடன் பகுஜன் கட்சி எம்பிகளும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து தனது ராஜ்யசபா எம்பி பதவியை மாயாவதி ராஜினாமா செய்தார். இந்த சூழலில் பீகாரில் போட்டியிட்டு மாயாவதி வெற்றி பெற உதவ தயாராக இருப்பதாக லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாயாவதியின் இந்த நடவடிக்கை மிகவும் துணிச்சலான ஒன்றாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அடக்க பாஜ முயற்சி செய்கிறது.

மதவாதத்தை எதிர்த்து போரிடும் மாயாவதி பீகாரில் போட்டியிட விரும்பினால் அவரை வெற்றி பெறச் செய்து ராஜ்யசபாவுக்கு அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். ஆனால் மாயாவதியின் இந்த நடவடிக்கை மிகப் பெரிய அரசியல் நாடகம் என பாஜ விமர்சித்துள்ளது.



இதுகுறித்து பாஜ தலைவர் பிரகாஷ் கூறுகையில், மாயாவதி உத்தரபிரதேசத்தில் மக்கள் ஆதரவை இழந்து விட்டார். அடுத்த முறை அவர் ராஜ்யசபா எம்பியாக தேவையான ஆதரவு கிடையாது.

இது தெரிந்துதான் திட்டமிட்டு ராஜினாமா என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். எனவே இது திட்டமிட்ட அரசியல் நாடகம் என்றார்.

மற்றொரு பாஜ தலைவர் நளின் கோலி கூறுகையில், விதிமுறைகளின்படி அவர் ராஜினாமா செய்ய விரும்பினால் அது அவரது தனிப்பட்ட விருப்பம்.

பிரதமர் மோடியின் அரசு வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

.

மூலக்கதை