எல்லையில் செல்போன் பயன்படுத்த தடை விதித்த ராணுவ மேஜரை சுட்டு கொன்ற வீரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எல்லையில் செல்போன் பயன்படுத்த தடை விதித்த ராணுவ மேஜரை சுட்டு கொன்ற வீரர்

புதுடெல்லி : காஷ்மீரில் எல்லையில் பணியின் போது செல்போன் பயன்படுத்த தடை விதித்த ராணுவ மேஜரை வீரர் ஒருவர் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவை சேர்ந்தவர் சிகார் தாபா.

இவர் இந்திய ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வந்தார். இவரிடம் ராணுவ வீரர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.

இருவரும் ராஷ்டீரிய ரைபிள் படையில் காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பணியில் இருந்தனர். பாகிஸ்தான் ராணுவ தாக்குதல், தீவிரவாதிகள் ஊடுருவல், தீவிரவாதிகள் தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடைபெறும் பதற்றமான உரி செக்டார் பணியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இப்பகுதியில் இந்திய நிலைகளை நோக்கி சுட்டனர். இதில் வீரர் ஒருவர் காயமடைந்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் இப்பகுதியில் மேஜர் சிகார் தாபா ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த திங்கட் கிழமை இரவு சுமார் 9. 45 மணி அளவில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு பணியில் இருந்த வீரர் செல்போன் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரை சிகார் தாபா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரர் தன்னிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார்.

இதில் மேஜர் சிகார் தாபா சம்பவ இடத்திலேயே பலியானார். மேஜர் சிகாருக்கு மனைவி மற்றும் 3 மாத குழந்தை உள்ளனர்.

ராணுவ வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த விவகாரம் ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை