கோடநாடு கொலை வழக்கில் 5 பேருக்கு குண்டாஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோடநாடு கொலை வழக்கில் 5 பேருக்கு குண்டாஸ்

ஊட்டி : ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ெஜயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் உள்ளது.

இந்த எஸ்டேட் பங்களாவிற்குள் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இரவு நுழைந்த மர்ம கும்பல், பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்தது. தொடர்ந்து இந்த கும்பல், ஜெயலலிதா மற்றும் சசிகலா அறைக்குள் நுழைந்து விலை உயர்ந்த பொருட்கள், நகை, பணம், சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கூலிப்படையினர் ஈடுபட்டது தெரியவந்தது.   கனகராஜை போலீசார் கைது செய்வதற்கு முன்பே சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார்.

சயான் என்பவர் கார்விபத்தில் காயமடைந்தார். மேலும், வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த ஜம்சீர்அலி, ஜித்தின்ராஜ் ஆகியோரை கேரள போலீசார் வாகன திருட்டு வழக்கில் கைது செய்து கேரளமாநிலம் மஞ்சேரி சிறையில் அடைந்துள்ளனர்.

இத்துடன் கனகராஜிக்கு கூலிப்படையாக செயல்பட்ட மனோஜ், சயான், மனோஜ்சாமி, குட்டி ஜிஜின், சதீஷன், தீபு, உதயன் உள்ளிட்ட 8 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

தீபு, உதயன், சதீஷன், மனோஜ், குட்டி ஜிஜின் ஆகியோர் மீது கேரள மாநிலத்தில் கொலை, கொள்ளை மற்றும் பல்வேறு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இவர்கள் 5 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்யா நேற்று இரவு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் இதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

.

மூலக்கதை