களக்காடு அருகே டெங்கு பீதியில் ஊரை காலி செய்த கிராம மக்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
களக்காடு அருகே டெங்கு பீதியில் ஊரை காலி செய்த கிராம மக்கள்

நெல்லை : நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு புளியங்குளத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தண்ணீர் இல்லாததால் 2 முதல் 3 கி. மீ.

தூரமுள்ள கடம்போடு வாழ்வு, வடிவாள்புரம், நல்லம்மாள்புரம் போன்ற ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இவ்வாறு கஷ்டப்பட்டு எடுத்து வரும் தண்ணீரை ஒரு வாரம் 10 நாட்கள் சேமித்து வைத்து புழங்க வேண்டியுள்ளது.

இதனால் நல்ல தண்ணீரில் டெங்கு கொசு புகுந்து தன் இனத்தை பெருக்குகிறது. இதனால்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பும் டெங்கு இந்த ஊரை ஆட்டிப்படைத்தது.

அப்போது உயிர்ப்பலி எதுவும் நடக்கவில்லை. தற்போது டெங்கு மீண்டும் ஆட்டி படைக்க தொடங்கியுள்ளது.

கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் டெங்கு பாதிப்பால் நாங்குநேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விமலா (29) கூறுகையில், ‘இரு நாட்களாக கடுமையான தலைவலி இருந்தது, பிறகு உடல் வலியோடு காய்ச்சல் வாட்டியது. நாங்குநேரி மருத்துவமனைக்கு சென்றபோது ரத்த சோதனை செய்து வைரஸ் காய்ச்சல் என்றனர்.

ஓரிரு நாள் தினமும் போய் சிகிச்சை பெற்றோம், பிறகு அது முடியாமல் படுக்கையில் சேர்ந்தோம். இப்போதுதான் எல்லோரும் ‘ரிலீஸ்’ ஆகி வருகிறோம். ’ என்றார்.

பக்கத்து தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி இதேபோல் குடும்ப சகிதமாக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் ரூ. 1. 5 லட்சம் செலவழித்து மீண்டு வந்துள்ளார்.

கடந்த 13ம் தேதி டெங்குவுக்கு உயிரிழந்த சுசிலா(40) குடும்பத்தில் அவரது கணவர் தியாகராஜன் (45), பிள்ளைகள் பரதன் (18), ரகு (16), அருண் (14), அகிலா (12) சுந்தர் (10) ஆகியோரும் இன்னமும் சிகிச்சையில்தான் உள்ளனர். ஊரில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது.

அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற பஸ் எதுவும் கிடையாது. ஆட்டோக்களிலும், வேன்களிலுமாக 5 பேர், 10 பேர் என தினமும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றுகொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் ஊரே காலியானது’ என்றார் ஆட்டோக்காரர் அகஸ்டின். மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கும் குடும்பத்தினர், சிகிச்சை முடிந்து ஊருக்கு திரும்புவதில்லை.

காய்ச்சல் பயம் காரணமாக உறவினர் வீடுகளுக்கு சென்று விடுகின்றனர், என்றார்.

மர்ம காய்ச்சல் பயம் வந்ததும் இங்கு இருக்கும் இந்து தொடக்கப்பள்ளிக்கு பக்கத்து ஊர்களிலிருந்து பிள்ளைகள் அனுப்புவதை நிறுத்தி விட்டனர். சுமார் ஒரு வாரம் பிள்ளைகளே வரவில்லை.

65 மாணவர்களை கொண்ட பள்ளி, காய்ச்சல் பாதிப்பிலிருந்து மீண்ட 6 மாணவிகளோடு இரு நாட்களாக இயங்கி வருகிறது. ஆசிரியர்களும் மருத்துவ விடுப்பில் போய்விட்டதாக தலைமை ஆசிரியை லதா பாலசுந்தரி கூறினார்.

இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்வூரில், நேற்று தான் சிலர் ஊருக்கு திரும்பினர்.

வந்தவர்கள் நேராக அங்குள்ள முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று கூழ் காய்ச்சி பரிகார பூஜை செய்தனர்.

.

மூலக்கதை