ராஜ்யசபாவில் நீட் தேர்வு விவகாரம் : திமுக, அதிமுக எம்பிக்கள் அமளி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜ்யசபாவில் நீட் தேர்வு விவகாரம் : திமுக, அதிமுக எம்பிக்கள் அமளி

புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த திமுக அதிமுக எம்பிக்கள் அமளியில் பரபரப்பு நிலவியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

3வது நாளான இன்று மக்களவையில் பசு விவகாரம், விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றை குறித்து பேசுவதற்கு காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபெற்று வரும் சட்ட விரோத சம்பவங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.

இதனால் கடும் அமளி நிலவியது. இதனால் நேற்று இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபா பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் நேற்று தலித் மக்கள் மீதான தாக்குதல் குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மாயாவதி வெளிநடப்பு செய்தார். மேலும் மத்திய அரசின் போக்கை கண்டித்து ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் இரு அவைகளிலும் பரபரப்பு நிலவியது.

இந்த சூழலில் இன்று காலை வழக்கம் போல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. ஏற்கனவே ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இதையடுத்து லோக்சபா கூடியதும் விவசாயிகள் பிரச்னை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபாவின் மைய பகுதிக்கு வந்து மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து மக்களவையை பகல் 12 மணி வரை ஒத்தி வைத்து சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். அதே போல் ராஜ்யசபாவிலும் பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தை சேர்ந்த திமுக, அதிமுக எம்பிக்கள் நீட் தேர்வில் மாநில அரசு புறக்கணிக்கப்படுவது குறித்து பிரச்னை எழுப்பினர். இதற்கு அனுமதி அளிக்க அவை தலைவர் மறுத்தார்.



இதையடுத்து திமுக, அதிமுக எம்பிக்கள் நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மாநில அரசின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என் திமுக, அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.

நீட் தேர்வு விவகாரத்திற்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.   இவர்களுக்கு ஆதரவாக எதிர்கட்சி உறுப்பினர்கள் அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பியதால் அமளி நிலவியது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை