காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாட்டு கொட்டகையான பயணிகள் நிழற்குடைகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாட்டு கொட்டகையான பயணிகள் நிழற்குடைகள்

சென்னை நகரில் பெரும்பாலான மாநகரப் பேருந்து நிறுத்தங்களில் உள்ள பயணிகள் நிழற்குடைகளில் மேற்கூரைகள் மற்றும் இருக்கைகள் உடைந்து, பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளன. உருப்படியாக உள்ள பேருந்து பயணிகள் நிழற்குடைகளில் டயர் பஞ்சர், மெக்கானிக் கடைகளோ அல்லது நடைபாதைவாசிகளோ ஆக்கிரமித்து விடுகின்றனர்.

அல்லது அந்த இடங்களை ஆக்கிரமித்து ஆட்டோ, டாடா மேஜிக் மற்றும் பழுதான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இவற்றுக்கு உதாரணமாக, எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனை, சென்ட்ரல் அரசு பொது மருத்துவமனை மற்றும் அண்ணாசாலை அருகே ஜி. பி. ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தங்களை கூறலாம்.

இதேபோல் சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்கள் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் சிக்கி தவிக்கின்றன.

இதேபோல் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் வீசிய வர்தா சூறாவளி புயலில் ஆவடி, அம்பத்தூர், திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள் முற்றிலும் இடிந்து, அங்கு திறந்தவெளியில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கும்மிடிப்பூண்டி பேருராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், பொது மருத்துவமனை, கல்வி அலுவலகம் உள்ளிட்ட எண்ணற்ற அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த அரசு சார்ந்த அலுவலகத்திற்கு ஆரம்பாக்கம், ரெட்டம்பேடு, வழுதலம்பேடு, சின்னநத்தம் மங்காவரம், மங்களம், மாதர்பாக்கம், பூவலம்பேடு, அயநெல்லுர், முக்கரம்பாக்கம், ஆகிய 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் அரசு பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டன.

அவற்றின் ஒரு கிராமத்தில் அரசு பேருந்து முறையாக இயக்கப்படாததால், அங்குள்ள பேருந்து நிறுத்தம் தற்போது கசாப்புக் கடையாக மாறிவிட்டது. இதனால் பேருந்துக்காக காத்திருப்பவர்கள் வெட்டவெளியில் காத்திருக்கும் அவலநிலை நீடித்து வருகிறது.

இதேபோல், பூந்தமல்லி நகராட்சியில் உள்ள மாங்காடு, பட்டூர், மவுலிவாக்கம், ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களை ஆடு, மாடுகள் ஆக்கிரமித்து, ஹாயாக ஓய்வெடுக்கின்றன. இதனால் பயணிகள் நடுரோட்டில் நிற்கும் அவலநிலை உள்ளது.

மற்றொரு வேடிக்கை என்னவென்றால், சென்னை முகப்பேர் கிழக்கு, பஜார் சாலையில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல, செயல்படாமல் உள்ள அம்மா உணவகத்தின் முன் ஒருவர் துணிக்கடை விரித்திருக்கிறார்.

தனது கடையை போலீஸ் உட்பட ஆளுங்கட்சியினர் யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, அம்மா உணவகத்தின் விலைப்பட்டியலை மறைத்தபடி ஜெயலலிதா படம் போட்ட விளம்பர பேனரை பாதுகாப்புக்கு வைத்திருக்கிறார். என்னவொரு முன்ஜாக்கிரதை! இக்கடையில் வசூலாகும் தொகையில் அங்குள்ள ஊழியர்களுக்கும் பங்கு செல்கிறது எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மக்கள் பயன்பாட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் அம்மா உணவகம் உட்பட பல்வேறு அரசு அலுவலக கட்டிடங்களை முறையாக செயல்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பதில்லை. இதனால் பலர் நடைபாதை ஆக்கிரமிப்பின் முன்னேற்றமாக, பல்வேறு அரசு இடங்களை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.

இதில் இழப்பு, மக்களின் வரிப் பணம்தான்.

ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களையும் அவர்கள் செலுத்திய வரிப் பணத்தினால் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களையும் முறைகேடாக பயன்படுத்தி, அதில் அதிக ‘கல்லா’ கட்டவே ஆளுங்கட்சியின் அனைத்து தரப்பினரும் செயல்பட்டு வருகின்றனர். மக்களின் நலன் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து நிறுத்தங்கள் மாடுகளின் கொட்டில்களாக மாறியதைப் போல், இன்னும் என்னவெல்லாம் மாறுமோ? இதற்காவது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

.

மூலக்கதை