இந்திய கிரிக்கெட் காதலர்களின் ‘லேட்டஸ்ட் க்ரஷ்’ மந்தனா...

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய கிரிக்கெட் காதலர்களின் ‘லேட்டஸ்ட் க்ரஷ்’ மந்தனா...

கிரிக்கெட் விளையாட்டை மதம் போன்றும், கிரிக்கெட் வீரர்களை கடவுளுக்கு நிகராகவும் கருதும் ரசிகர்களை கொண்ட இந்தியா போன்ற தேசத்தில் மகளிர் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி வருகிறது.

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் மெல்ல மெல்ல முக்கியத்துவம் பெற்று வருகிறது. அண்மையில் நடந்த ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது.

இதனால் ஐசிசி மகளிர் உலக கோப்பையின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது. தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் மகளிர் உலக கோப்பையில் இந்திய அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே செயல்படுகிறது.

குறிப்பாக ஒரு வீராங்கனை தனது அழகான லுக், ஸ்மைல், களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நம்பிக்கை, திறமை ஆகியவற்றின் மூலம் இந்திய கிரிக்கெட் காதலர்களின் புதிய ‘க்ரஷ்’ ஆக உருவெடுத்துள்ளார். இந்திய அணியின் இடது கை தொடக்க வீரராங்கனை ஸ்மிருதி மந்தனாதான் அவர்.

இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் முறையே 90, 106 ரன்களை குவித்து இந்தியா வெற்றி பெற உதவியதால் பத்திரிகை செய்திகளில் அதிகம் இடம் பிடித்தார்.

இந்த 2 போட்டிகளிலும் ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ விருதுடன் சேர்த்து கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்துள்ளார்.

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் 1996ம் ஆண்டு ஜுலை 18ம் தேதி பிறந்தார் மந்தனா. தந்தை  னிவாஸ்.

தாய் ஸ்மிதா. 2 வயது நிறைவடைந்திருந்தபோது அவரது குடும்பம் சாங்லி நகருக்கு இடம் பெயர்ந்தது.

தந்தை னிவாஸ், சகோதரர் ஷர்வன்  இருவரும் சாங்லி மாவட்ட அளவில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள். சகோதரர் ஷர்வன் மகாராஷ்டிரா மாநில யு-16 (16 வயதுக்குட்பட்டோருக்கான) டோர்னமெண்ட்டுகளில் விளையாடியதை பார்த்து கிரிக்கெட் மீது மந்தனாவுக்கு ஈர்ப்பு வந்தது.

இதன் மூலம் வெறும் 9 வயதில் மகாராஷ்டிரா யு-15 அணிக்கும், 11 வயதில் மகாராஷ்டிரா யு-19 அணிக்கும் தேர்வானார். ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை கடந்த 2013ம் ஆண்டு மந்தனா படைத்தார்.

மேற்கு மண்டல அணிக்காக யு-19 போட்டி ஒன்றில் 150 பந்துகளில் 224 ரன்களை அவர் குவித்தார். அதே ஆண்டில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய தேசிய அணிக்காக அறிமுகம் ஆனார்.

அப்போது அவருக்கு வயது வெறும் 16 மட்டுமே. டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய தேசிய அணியில் 2014ம் ஆண்டு மந்தனாவுக்கு இடம் கிடைத்தது.


 
2016ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் அணியில் இடம் பிடித்த ஒரே இந்திய வீராங்கனை மந்தனா மட்டுமே. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹூட் அணிக்காக ஓராண்டு அடிப்படையில் கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஹர்மான்பிரீத் கவுருக்கு பிறகு பிக் பாஷ் லீக் தொடருக்கு ஒப்பந்தம் ஆன 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார். அவரது தோழிகள் கேரியர் என்னவாக இருக்க வேண்டும் என யோசித்து கொண்டிருக்கும் வயதில், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்வுமனாக உருவெடுத்துள்ளார் மந்தனா.

சகோதரர் ஷர்வன் இன்னமும் கூட வலை பயிற்சியில் மந்தனாவுக்கு பந்து வீசி கொண்டிருக்கிறார். டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் தற்போது அதிகம் பேசப்படுபவர் மந்தனாதான்.

பாலிவுட் நடிகைகளுக்கு சரி நிகராக மந்தனா மீதான ‘க்ரஷ்-ஐ’ வெளிப்படுத்தும் மீம்ஸ்கள் கொடி கட்டி பறக்கின்றன. மகளிர் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் பார்ப்பதற்கு மந்தனாவும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

இன்னும் சில தினங்களில் பிறந்த நாள் காண இருக்கும் மந்தனாவின் தற்போதைய இலக்கு மகளிர் உலக கோப்பையை இந்தியா வெல்ல உதவ வேண்டும் என்பதுதான்.

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் மந்தனா இரண்டே ரன்களில் ஆட்டமிழந்தாலும் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என நம்பலாம்.

.

மூலக்கதை