வடகொரியா அணு ஆயுத சோதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வடகொரியா அணு ஆயுத சோதனை

சியோல்: வடகொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டுவதற்காக அடிக்கடி அணு ஆயுத சோதனையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.

ஐநா சபை, உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தும், பொருளாதார தடைவிதித்துள்ள நிலையிலும், எதையும் கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் அணு ஆயுத சோதனையில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. தொடர் சோதனையில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என்றார். வடகொரியாவின் செயல் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில், வடகொரியா இன்று அணு ஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் பன்க்யோன் பகுதியில் இருந்து ஏவப்பட்ட அணு ஆயுதங்கள் ஜப்பான் கடலின் கிழக்கு பகுதியில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

வடகொரியாவின் இச்செயலுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை மேற்கொள்ளும் வடகொரியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஜெர்மனியில் வருகிற 7, 8ம் தேதியன்று ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இதில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட முக்கிய நாடுகள் பங்கேற்கவுள்ள நிலையில், வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை