அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா

வாஷிங்டன் : அமெரிக்காவுடன் நெருக்கமான குடும்ப உறவு வைத்திருப்பவர்கள் அல்லது வர்த்தக உறவு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என முஸ்லிம் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாட்டை டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதை தொடர்ந்து அவரது அரசு, குடியேற்றத்துறை மற்றும் வெளியுறவுத்துறையில் கடும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறது. அமெரிக்காவிற்குள் நுழைய விரும்புவர்களுக்கு விசா அளிப்பதில் கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் டிரம்ப் அரசு அடுத்தடுத்து அறிவித்து வருகிறது.

தற்போது டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் முக்கியமாக சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஈரான், ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு விசா வழங்குவதில் புதிய நிபந்தனைகளை அறிவித்துள்ளது.

அதில் அமெரிக்காவில் நெருங்கிய குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்கள், வர்த்தக உறவுகளை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும். இவர்கள் தங்களது உறவினர்கள் தான் என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளையும் அந்த உத்தரவில் சுட்டி காட்டியுள்ளது.



இதுதொடர்பாக தூதரகங்களுக்கு டிரம்ப் அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள், விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, தங்களது நெருக்கமான குடும்ப உறுப்பினர்களான பெற்றோர், வாழ்க்கை துணைவர், குழந்தை, மகன் அல்லது மகள், சகோதரர்கள் ஆகியோர் இருப்பதற்கான சான்றுகளை அளிக்க வேண்டும். தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, மாமா, அத்தை, மருமகள், மருமகன், ஒன்று விட்ட சகோதரன் அல்லது சகோதரி ஆகியோரை குடும்ப உறுப்பினர்களாக கருத முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் தடை தளர்த்தியதை தொடர்ந்து புதிய உத்தரவை டிரம்ப் அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை