தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மோடி, டிரம்ப் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மோடி, டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது தீவிரவாத செயல்பாடுகளுக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இரு தலைவர்களும் கூட்டாக எச்சரிக்கை விடுத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல்,  அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். 24ம் தேதி போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ  காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

இதில் இரு  நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட  துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர்,  அங்கிருந்து நேற்று முன்தினம் காலை அமெரிக்கா வந்தடைந்தார்.   பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி அமெரிக்கா செல்லும் நான்காவது பயணமாகும்.   தலைநகர் வாஷிங்டனில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



அமெரிக்க பயணத்தின் முதல் நாளான  நேற்று முன்தினம், ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக்,  வால்மார்ட் தலைவர் மெக்மில்லன், கார்டர் பில்லரின் ஜிம் உம்பிலிபை, கூகுள்  நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட்டின் சத்ய நாதெள்ளா  உள்ளிட்ட அமெரிக்காவின் 20 முன்னணி நிறுவன சிஇஓக்களுடன் வட்ட மேஜை  மாநாட்டில் மோடி பங்கேற்றார்.    ‘மேக் இன்  இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார். அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் நேற்று மோடி  உரையாற்றினார்.    அப்போது எச்1பி விசா குறித்து அதிபர் டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என அவர்கள் மோடியிடம் வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் பேச்சு வார்த்தை நடத்தினர்.   நேற்று பிற்பகல் 1. 10 மணி அளவில் வெள்ளை மாளிகைக்கு வந்த மோடியை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலீனா ஆகியோர் வரவேற்றனர்.

அப்போது இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகச் சிறந்த மாற்றங்களை மோடி செய்துள்ளதாக டிரம்ப் பாராட்டினார்.

அதிபர் டிரம்பின் அறையில் இரு தலைவர்களும் 20 நிமிடங்களுக்கும் மேலாகத் தனித்துப் பேசினர். மோடியின் வருகை அமெரிக்காவுக்கு பெருமை சேர்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.


வெள்ளை மாளிகையில் உள்ள அமைச்சரவை கட்டிடத்தில் இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடைபெற்றது.   இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான உறவு, ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தீவிரவாதத்தை பூண்டோடு ஒழிப்போம் என இரு தலைவர்களும் உறுதியேற்றுக் கொண்டனர்.

பின்னர் இருவரும் வெள்ளை மாளிகையில் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

அப்போது, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத செயல்பாடுகளை அந்நாடு முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என இரு தலைவர்களும் எச்சரித்தனர்.

மேலும் மும்பை தாக்குதல், பதன் கோட் தாக்குதல் ஆகிய சம்பவங்களுக்கு உரிய நீதியை பாகிஸ்தான் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், நாங்கள் தீவிரவாத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அதை ஒழித்து கட்ட இரு நாடுகளின் ஒத்துழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. உலகின் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்பெறும். இந்த உறவின் மூலம் உற்பத்தி, வளர்ச்சி, வேலை வாய்ப்பு தொழில் நுட்பம் ஆகியவற்றில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மேலும் பெருகும்.

இரு நாடுகளும் தீவிரவாதம் குறித்த கவலையை பகிர்ந்து கொள்வதால், தீவிரவாத ஒத்துழைப்பு, பாதுகாப்பு, தளவாடம், தொழில் நுட்பம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் உடன் நட்புறவு மற்றும் கூட்டு ஒத்துழைப்பு வலுப்பட ஒப்புதல் அளித்துள்ள அதிபர் டிரம்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அதே போல் டிரம்ப் பேசுகையில், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை இரு நாடுகளும் ஒன்றிணைந்து தொடரும்.

மேலும் பாதுகாப்பு துறையில் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இரு நாடுகளும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விஷயத்தில் இருநாடுகளும் ஒத்து போகின்றன. எந்த வகையிலும் தீவிரவாதத்தை பூண்டோடு ஒழிப்போம்.

இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் தினமும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த மாதம் இந்திய பெருங்கடலில், ஜப்பான் வீரர்களுடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் இந்திய பாதுகாப்புத்துறை சார்பில் அமெரிக்காவின் 100 புதிய விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதற்கு டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் இந்தியாவில் அடுத்த மாதம் அமல்படுத்த உள்ள ஜிஎஸ்டி பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

இந்தியர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாக்கி தருவதில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படும். உலகிலேயே பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடு இந்தியா என்று பாராட்டினார்.

மேலும் இரு நாட்டு தலைவர்களும் ஆப்கன் விவகாரம், வட கொரியா ஆகியவற்றின் மூலம் ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையற்ற சூழல் குறித்து கவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

எனவே ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உருவாக்க இரு தலைவர்களும் கூட்டாக செயல்பட முடிவு செய்தனர். மோடி டிரம்ப் சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில், தீவிரவாத ஒழிப்பு, சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செய்லபடுவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இரு நாடுகளுக்கு இடையில்  தீவிரவாத ஓழிப்பு, என். எஸ். ஜி. , ஜ. நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது என்றார்.

இந்தியா வர டிரம்ப் மகள்விருப்பம்

பின்னர் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்திய  அமெரிக்க அரசுத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மோடியை வரவேற்றுப் பேசிய டிரம்ப், இந்தியாவுடன் நல்லுறவு வைத்திருப்பதற்கு அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.   இந்த பயணத்தின் போது டிரம்பை இந்தியாவுக்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்தார். அப்போது டிரம்பின் மகள் இவான்கா, இந்தியாவுக்கு வர மிகவும் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.

உடனே தங்களை வரவேற்க நாங்கள் தயாராக இருப்பதாக மோடி குறிப்பிட்டார். இதனால் இரு தலைவர்களும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இதன்பின்னர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நெதர்லாந்து செல்கிறார்.

அங்கு அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே, மன்னர் வில்லியம் அலெக்சாண்டர், ராணி மேக்சிமா ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

பின்னர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்புகிறார்.

.

மூலக்கதை