இப்தார் விருந்தை நிறுத்தினார் டிரம்ப்

தினமலர்  தினமலர்
இப்தார் விருந்தை நிறுத்தினார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில், பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இப்தார் விருந்தை நிறுத்தி உள்ளார், புதிய அதிபர் டொனால்டு டிரம்ப்.
முஸ்லிம்கள், ரம்ஜான் மாதத்தின் போது, நோன்பு இருப்பர். இந்த மாதத்தில், நோன்பு திறப்பதை குறிப்பிடும் வகையில், இப்தார் விருந்து வழங்கப்படும். அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில், அதிபரின் சார்பில், பல ஆண்டுகளாக, இப்தார் விருந்து வழங்கப்பட்டு வந்தது.ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், வெள்ளை மாளிகையில், இந்த ஆண்டு இப்தார் விருந்து நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.வெள்ளை மாளிகையில், முதன்முறையாக, 1805ல், அப்போதைய அதிபர், தாமஸ் ஜெபர்சன், இப்தார் விருந்து வழங்கினார். 1996ல், பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது, அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன், இப்தார் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.அதை தொடர்ந்து, 1999 முதல், அதிபர் மாளிகையில் இப்தார் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமெரிக்க வாழ் முஸ்லிம் தலைவர்கள், எம்.பி.,க்கள், வெளிநாட்டு துாதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2001 செப்., 11ல், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போதும், இப்தார் விருந்து நிகழ்ச்சி தொடர்ந்தது.ஒபாமா நிர்வாகத்தின் போதும், இந்த வழக்கம் தொடர்ந்தது. ஆனால், தற்போது புதிய அதிபராக, டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

மூலக்கதை