காலாவில் நடிக்க விரும்பும் தனுஷ்

PARIS TAMIL  PARIS TAMIL
காலாவில் நடிக்க விரும்பும் தனுஷ்

 வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. தனுஷ், அமலாபால், சமுத்திரகனி உள்ளிட்டோர் தொடர, இவர்களுடன் ஹிந்தி நடிகை கஜால் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தனுஷ் மற்றும் தாணு இணைந்து தயாரித்துள்ளனர்.
 
விஐபி-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழாவில் தனுஷ், அமலாபால், கஜோல், செளந்தர்யா ரஜினி, ஷான் ரோல்டன், சமுத்திரகனி, தாணு, பாலிவுட் இயக்குநர்கள் பால்கி, ஆனந்த் எல் ராய், லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மூன்று மொழிகளுக்கும் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் தனுஷ் கலந்துரையாடியதாவது...
 
விஐபி-2 பற்றி?
 
வேலையில்லா பட்டாதாரி வெற்றி படம் என்பதை விட அனைவரையும் கவர்ந்த படம். ரசிகர்களை கவர்ந்த படத்தை அப்படியே விட்டுப்போக மனதில்லை. ஆகையால் விஐபி 2 படத்தை உருவாக்க எண்ணினேன். எந்த மாதிரி கதை பண்ணுவது என்பது பெரிய சவாலாக இருந்தது. கொடி படத்திற்காக பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருந்தபோது தான் இந்த கதை உருவானது. முதல்பாகத்தில் இருந்து போன்று இந்தப்படத்திலும் அம்மா சென்ட்டிமென்ட் இருக்கும். கூடவே அப்பா, மனைவி, சகோதரன், நண்பர்கள் என ஒவ்வொருவரின் உணர்வுகளும் சொல்லப்பட்டுள்ளன.
 
விஐபி-2 மூன்று மொழிகளில் ரிலீஸ் பற்றி?
 
தமிழ், தெலுங்கில் மட்டும் தான் படத்தை ஆரம்பித்தோம். தங்கல், பாகுபலி போன்ற படங்கள் எல்லா மொழிகளிலும் ரிலீஸாகி வெற்றி பெற்றதால் நாமும் முயற்சி பண்ணுவோம் என்று எண்ணினேன். நல்ல படத்திற்கு எப்போதும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள், இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆகையால் ஹிந்தியிலும் ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணினோம். அதற்கான வியாபாரமும் எளிதாக கிடைத்தது.
 
ஐஸ்வர்யா - செளந்தர்யா இயக்கம் பற்றி?
 
ஐஸ்வர்யா, செளந்தர்யா இருவரின் இயக்கத்திலும் நடித்துவிட்டேன். இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் என்பதை விட ஒற்றுமையை தான் சொல்ல வேண்டும். இருவரிடமும் நேர்மை, அர்ப்பணிப்பு, தங்களுக்கு என்று ஒரு பெயர் கிடைக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. இருவரும் வித்தியாசமாக யோசிப்பவர்கள். பெண் இயக்குநர்களை புரொமோட் பண்ணுவது தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷம்.
 
கஜோல் உடன் நடித்த அனுபவம் பற்றி?
 
14 - 15 வயது உடைய பெண்ணின் எனர்ஜி தான் இன்னமும் கஜோலிடம் இருக்கிறது. தெரியாத மொழியாக இருந்தாலும் அதை உள்வாங்கி கொண்டு அருமையாக நடித்தார். முதல் இரண்டு நாள் தான் கொஞ்சம் சிரமப்பட்டார். மிகவும் திறமையான நடிகை. இயற்கையாகவே அவரிடம் நடிப்பு திறன் உள்ளது. கஜோல் உடன் நடிப்பதே பெரிய சவால் தான்.
 
பவர் பாண்டி 2 எப்போது.?
 
பவர் பாண்டி-2 கண்டிப்பாக வரும். கதை ரெடியாக உள்ளது. ராஜ்கிரணிடமும் சொல்லியிருக்கிறேன். அவரும் எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். உடனே இப்படத்தை இயக்கலாமா... அல்லது இடையில் வேறு படத்தை இயக்கிவிட்டு பவர் பாண்டி 2-வை இயக்கலாமா என்று என்னுள் ஒரு குழப்பமான சூழ்நிலை உள்ளது.
 
மீண்டும் எப்போது இரட்டை வேடம்?
 
நல்ல கதை வந்தால் மீண்டும் இரண்டு வேடங்களில் நடிப்பேன்.
 
ஹாலிவுட் படம் எந்தளவு உள்ளது
 
ஹாலிவுட் படம் 50 சதவீதம் முடிந்துவிட்டது. அடுத்தப்படியாக பிரசல்ஸ் செல்கிறேன். ஜூலை மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.
 
காலாவில் நடிக்கிறீர்களா?
காலாவில் நடிக்க எனக்கும் ஆசையாக தான் உள்ளது. ஆனால் இதுவரை அந்த மாதிரி எதுவும் தகவல் இல்லை. அப்படி ஏதாவது நடந்தால் நிச்சயம் நான் மகிழ்வேன், பெருமையாக கருதுவேன். நானும், ரஜினி மாதிரி கொஞ்சம் நடிப்பேன்.
 
வட சென்னை படம் எந்தளவு உள்ளது?
 
வடசென்னை 90 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு 10 - 15 நாள் ஷூட்டிங் தான் பாக்கி உள்ளது. விசாரணை படம் ஆஸ்கருக்கு சென்றதால், அதுதொடர்பான புரொமோஷன் வேலைகளுக்காக வெற்றிமாறன் சென்றுவிட்டார். இதனால் 3 மாதம் தாமதமானது. வட சென்னை என் கனவு படம். ரொம்ப அருமையாக வந்துள்ளது. ஹாலிவுட் படத்தை முடித்ததும் வட சென்னை தான். 3 பாகமாக வெளிவர இருக்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் அதன் கதை முடிந்துவிடும். ஆனால் அந்த கதையோடு தொடர்படுத்தி அடுத்தடுத்த பாகங்கள் இருக்கும்.
 
தனுஷின் எனர்ஜி யார்?
 
என் பசங்க லிங்கா, யாத்ரா தான் என்னுடைய எனர்ஜி. அவங்க 18 வயது வருவதற்குள் என்னை நினைத்து பெருமைப்படும் அளவிற்கு நான் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும், அது தான் என் ஆசை.
 

மூலக்கதை